3649. | இளவலை நோக்கினன் இராமன், 'ஏழையை உளைவு செய் இராவணன் உறையும் ஊரும், இவ் அளவையது ஆகுதல் அறிதி; ஐய! நம் கிளர் பெருந் துயரமும் கீண்டது ஆம்' என, |
இராமன் இளவலை நோக்கினன் - இராமபிரான் தம்பியை நோக்கி; 'ஏழையை உளைவு செய் இராவணன் - சீதைக்குத் துன்பம் தருகின்ற இராவணன்; உறையும் ஊரும் - வாழ்கின்ற ஊர்; இவ் அளவையது ஆகுதல் ஐய அறிதி - இந்த எல்லைக்குள் இருப்பதை அறிக; நம் கிளர் பெருந் துயரமும் கீண்டது ஆம்' - கிளர்கின்ற நம் பெருந் துயரமும் அழிந்தது'; என - என்று சொல்ல, கவந்தன் கரங்களின் நெருக்கலால் ஏற்படும் விளைவுகள்என்பதை அறியாமல், ஏற்படும் ஆரவாரங்களும் நிலை குலைவுகளும்அரக்கர் சேனையின் வரவால் விளைவன என்று தவறாக நம்பினர்.சேனையின் வரவு என்று கருதியதால், அச் சேனையை ஏவும்இராவணனது இருக்கையும் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதுஇராமனின் கருத்து. 'இராவணன் சேனை வந்து விட்டதால் போரிட்டுவென்று சீதையை மீட்டுவிடலாம்' என்ற நினைப்பினால், 'நம் பெருந்துயரும் கீண்டது' என்கிறான் இராமன். அறிவு குறைந்தவள், பேதை,வலிமை குறைந்தவள் பெண் என்ற பழங்கருத்தினால் சீதாபிராட்டியையும் 'ஏழை' என்றது மரபு வழிப்பட்ட புலமை.இளையவனை 'ஐய' என்றது அன்பினால் வந்த மரபு வழுவமைதி.கிளர் துயரம் - வினைத்தொகை; பெருந் துயரம் - பண்புத் தொகை.இச் செய்யுள் குளகம். 7 |