3651. | 'தெள்ளிய அமுது எழத் தேவர் வாங்கிய வெள் எயிற்று அரவம்தான்? வேறு ஓர் நாகம்தான்? தள்ள அரு வாலொடு தலையினால் வளைத்து, உள் உறக் கவர்வதே ஒக்கும்; ஊழியாய்!' |
'ஊழியாய்' - எல்லாம் அழிகின்ற ஊழிக்காலத்தும் நிலைத்து நிற்பவனே; தெள்ளிய அமுது எழ - தெளிந்த அமுதம் தோன்றிட; தேவர் வாங்கிய - தேவர்கள் (மந்தர மலையிலே கயிறாகச் சுற்றி) இழுத்த; வெள் எயிற்று அரவம்தான் - வெள்ளைப் பற்கள் கொண்ட வாசுகி நாகமோ; வேறு ஓர் நாகம்தான் - அல்லது வேறு ஒரு பாம்போ; தள்ள அரு வாலொடு தலையினால் வளைத்து - ஒதுக்கித் தள்ளுதற்கு அரிய வாலோடு தலையையும் பிணைத்து வளைத்து; உள் உறக் கவர்வதே ஒக்கும் - (தன் வளைவுக்குள் சிக்கியவற்றையெல்லாம்) தன்னுள்ளே பற்றிக் கொள்வதைப் போல காணப்படுகின்றது' (என்று இலக்குவன் கூறினான்). கவந்தனின் கரங்கள் வளைவது ஒரு மாபெரும் பாம்பு வாலை தலையொடு பிணைத்திருப்பதுபோல் காணப்படுகின்றது. தலையினும் வால் பகுதி மெலிந்திருப்பது பாம்பின் வடிவம்; எனவே, இங்கு உவமை வடிவத்தைக் குறித்ததன்று; வளைத்தல் தொழிலே இங்கு பொதுத்தன்மை. ஊழி பெயரினும் தான் பெயராதது பரம்பொருள்; இராமன் பரம்பொருளின் அவதாரமாதலின் 'ஊழியாய்' என விளிக்கப் பெற்றான். அரவம்தான், நாகம்தான் என்ற இடங்களில் தேற்றப் பொருள் தரும் 'தான்' ஐய வினாப் பொருளில் வந்தது. 9 |