கவந்தன் தோற்றம் 3652 | என்று இவை விளம்பிய இளவல் வாசகம் நன்று என நினைந்தனன், நடந்த நாயகன்; ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு, ஓங்கல்தான் நின்றென இருந்த அக் கவந்தன் நேர் சென்றார். |
என்று இவை விளம்பிய - என்று இவற்றைச் சொல்லிய;இளவல் வாசகம் - தம்பி இலக்குவனின் வார்த்தை; நன்று என -பொருத்தமானதே என்று; நடந்த நாயகன் நினைந்தனன் - (உயிர்கள்மேல் கொண்ட இரக்கத்தால் அவதரித்துப் புவி மீது) நடந்ததலைவனாகிய இராமன் எண்ணினான்; ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு - ஒன்று அல்லது இரண்டு யோசனைத் தொலைவு உள்ளே கடந்து சென்று; ஓங்கல்தான் நின்றென - ஒரு மலையே நின்றது போல; இருந்த அக் கவந்தன் நேர் சென்றார் - அமர்ந்திருந்த அந்தக் கவந்தனுக்கு நேராகச் சென்றடைந்தனர் இருவரும். ஒன்று இரண்டு யோசனை' என்பது உலக வழக்கில் பேசுவது போல் அமைந்தது; திட்டவட்டமாக வரையறுத்துக் கூறாதபோது ஒன்று அல்லது இரண்டு' என்ற பொருள்பட 'ஒன்றிரண்டு' எனப் பேசுவது பொது வழக்கு. மலை நின்றால் அமர்ந்திருக்கும் கவந்தன் போலக் காட்சியளிக்குமாம்; நிற்பதற்குக் கால் இல்லாத கவந்தன் இருந்த கோலத்திலேயே நிமிர்ந்து நிற்கும் ஒங்கல் போன்றவன். அவன் தோற்றத்தைச் சொல்லோவியப்படுத்தியது அருமை. 10 |