3653. | வெயில் சுடர் இரண்டினை மேரு மால் வரை குயிற்றியதாம் எனக் கொதிக்கும் கண்ணினன்; எயிற்று இடைக்கு இடை இரு காதம்; ஈண்டிய வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான். |
வெயில் சுடர் இரண்டினை - வெப்பம் மிக்க இரண்டு சூரியனை; மேரு மால் வரை குயிற்றியதாம் என - மேருவாகிய பெரிய மலையிலே பதித்தது என்று சொல்லும்படி; கொதிக்கும் கண்ணினன் - கொதிக்கின்ற கண்களை உடையவனும்; எயிற்று இடைக்கு இடை இரு காதம் ஈண்டிய - ஒரு பல்லுக்கும் அடுத்த பல்லுக்கும் இடையில் இரண்டு காதம் தொலைவு கொண்டுள்ள; வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான் - மீன் வாழும் கடல் போன்ற வாயை வயிற்றிலே உடையவனும். வெயில் : வெப்பத்தோடு கூடிய ஒளி. கவந்தன் மேருவைப் போன்ற உருவம் கொண்டவன்; மேரு மலையிலே இரண்டு சூரியனைப் பதித்தது போன்று காட்சியளிப்பவை அவன் கண்கள். வாய் எனும் வேலை : உருவகம். வேலைக்கு மகரம் அடைமொழி. கண்ணினன், வேலையான் என இச் செய்யுளில் வரும் சொற்கள் தொடர்ந்து மூக்கினான் நாவினான் என்பவற்றையும் இணைத்து 3661 ஆம் பாடலில் உள்ள 'இருந்தவன்' என்ற சொல்லைக் கொண்டு முடியும். 3653 முதல் 3661 வரையுள்ள செய்யுள்கள் ஒரு தொடர். 11 |