3654. | ஈண்டிய புலவரோடு அவுணர், இந்துவைத் தீண்டிய நெடு வரைத் தெய்வ மத்தினைப் பூண்டு உயர் வடம், இரு புடையும் வாங்கலின், நீண்டன கிடந்தென நிமிர்ந்த கையினான். |
ஈண்டிய புலவரோடு அவுணர் - திரண்ட தேவர்களோடு அசுரர்களும் சேர்ந்து; இந்துவைத் தீண்டிய நெடுவரைத் தெய்வ மத்தினைப் பூண்டு உயர் வடம் - சந்திரனைத் தொடும் அளவுக்கு உயர்ந்த மேருவாகிய மத்தினைச் சுற்றி உயர்ந்த வடத்தினை; இரு புடையும் வாங்கலின் - இரண்டு பக்கத்திலுமிருந்து இழுத்துக் கடைதலால்; நீண்டன கிடந்தென - அவ் வாசுகி நீண்டு கிடந்தது போன்ற; நிமிர்ந்த கையினான் - நீண்ட கைகளை உடையவனும். இந்து : சந்திரன். மேரு மலை தெய்வீகம் பொருந்தியதாகலின் தெய்வ மத்து எனப்பட்டது. 12 |