3655. | தொகைக் கனல் கருமகன் துருத்தித் தூம்பு என, புகைக் கொடி, கனலொடும் பொடிக்கும் மூக்கினான்; பகைத் தகை நெடுங் கடல் பருகும் பாவகன் சிகைக் கொழுந்து இது எனத் திருகு நாவினன். |
கருமகன் - கருமானின்; தொகைக் கனல் துருத்தித் தூம்பு என - தொகுப்பாய் உள்ள நெருப்பில் அமைந்த ஊதுலையின் துளை போல; புகைக் கொடி கனலொடும் பொடிக்கும் மூக்கினான் - புகையை நெருப்போடு வெளிப்படுத்துகின்ற மூக்கினை உடையவன்; பகைத் தகை - பகைமைப் பண்பு கொண்ட; நெடுங்கடல் - பெரிய கடலினது நீரை; பருகும் பாவகன் - குடித்துவிடுகின்ற அக்கினிதேவனின்; சிகைக் கொழுந்து இது என - சுவாலையின் கொழுந்துதான் இது என்னும்படி; திருகு நாவினன் - வளைந்து சுழல்கின்ற நாக்கினை உடையவன். கவந்தனின் மூக்கும் நாக்கும் இங்கே உவமைகளால் விளக்கப்பட்டன. கொல்லனின் உலைக்களத்துத் துருத்தியின் வாயிலாகப் புகையும் நெருப்பும் உமிழப்படும். அந்தக் காட்சி கனல் உமிழ்கின்ற கவந்தனின் மூக்குக்கு உவமையாயிற்று. நீர், நெருப்புக்குப் பகையாதலால் நீர் நிறைந்த கடலினைப் பகைத்தகை நெடுங்கடல்' என்றார். பாவகன், நெருப்பிறைவனாகிய அக்கினி தேவன். இடைவிடாது ஆறுகள் கடலில் கலப்பதால் நீர் வரைகடந்து பெருகிவிடுமோ என்ற எண்ணத்தால் கடல் நீரை வடவைமுகத் தீ பருகி விடுவதாகவும், பெண் குதிரையின் முக வடிவில் இந்த நெருப்பு கடலின் நடுவே இருப்பதாகவும் புராண நூல்கள் பேசுகின்றன. கரித் துண்டுகள் பலவற்றிலிருந்து நெருப்பு எழுவதால் கொல்லனின் ஊதுலைக் களத்து நெருப்பைத் தொகைக் கனல் என்றார். 13 |