3656. | புரண்டு பாம்பு இடை வர வெருவி, புக்கு உறை அரண்தனை நாடி, ஓர் அருவி மால் வரை முரண் தொகு முழை நுழை, முழு வெண் திங்களை இரண்டு கூறிட்டென, இலங்கு எயிற்றினான். |
பாம்பு புரண்டு இடைவர - (இராகு என்னும்) பாம்பு புரண்டு தன்னை நோக்கி வருவதால்; வெருவி - அஞ்சி; புக்கு உறை அரண் தனை நாடி - புகுந்து தங்குவதற்கு ஏற்ற பாதுகாப்பான இடத்தைத் தேடி; ஓர் அருவி மால்வரை - அருவி வீழ்கின்ற ஒரு பெரிய மலையிடத்தமைந்த; முரண் தொகு முழை நுழை - வலிமை கொண்ட ஒரு குகைக்குள் நுழைகின்ற; முழுவெண் திங்களை - முழுவடிவமைந்த சந்திரனை; இரண்டு கூறு இட்டென - இரண்டு பகுதிகளாகச் சிதைத்து விட்டது போலக் காணப்படும்; இலங்கு எயிற்றினான் - ஒளிர்கின்ற இரண்டு (கோரைப்) பற்களை உயைவன். கவந்தனின் கோரைப் பற்களின் தோற்றத்தை வருணிப்பது இந்தப் பாடல். பாதுகாப்பான இடத்தைத் தேடுவதும் குகையினுள் நுழைவதும் இராகுவைக் கண்டு அஞ்சுவதுமாகிய நிகழ்ச்சிகள் ஒரு கதை போன்று அமைந்த கவிதைக் கற்பனை. பாதுகாப்பான இடம் என்று துணிந்து புகுந்த இடத்திலே சிதைக்கப்பட்டது என்பது கதைக்கு ஓர் அவல முடிவு காட்டுகின்ற கற்பனை. முழு வெண் திங்களைப் பிளந்தால் கோரைப் பல்லின் தோற்றம் வருமா என்றெல்லாம் நுணுகி நோக்குவதில் பயன் இல்லை. கோரைப் பல்லைப் பார்த்தால் பிளவுண்ட திங்கள் கவிஞரின் நினைப்பில் எழுகிறது. ஏன் பிளவுண்டது என்ற ஒரு வினா கவிஞர்க்கு அவரை அறியாமலேயே அடி மனத்தில் எழுகிறது. அங்கேயே வினாவுக்கு விடையும் கிடைக்கிறது. இராகுவிடமிருந்து தப்பி ஓடியது. அரண் எனக் கருதிய இடத்திலே அவலம் விளைந்தது. 14 |