3657. ஓத நீர், மண்,
     இவை முதல ஓதிய
பூதம் ஓர் ஐந்தினில்
     பொருந்திற்று அன்றியே,
வேத நூல் வரன்முறை
     விதிக்கும் ஐம் பெரும்
பாதகம் திரண்டு, உயிர்
     படைத்த பண்பினான்.

    ஓத நீர் மண் இவை முதல ஓதிய - குளிர்ந்த நீர், மண் முதலாக
ஓதப்பட்ட; பூதம் ஓர் ஐந்தினில் - ஐந்து பூதங்களினால்; பொருந்திற்று
அன்றி -
(இவனது உடல்) அமைந்து பொருந்தியது என்பதல்லாமல்; வேத
நூல் வரன்முறை விதிக்கும் -
வேத நூல்கள் மரபுகள் வகுத்த;
ஐம்பெரும் பாதகம் திரண்டு - ஐந்து பெரும் பாதகங்களே ஓர் உடம்பாக
ஒன்று சேர்ந்து; உயிர் படைத்த பண்பினான் - உயிர் பெற்றுவிட்டது
போன்ற தன்மை உடையவன்.

     உடம்புகள் ஐந்து பூதச் சேர்க்கையால் உண்டாவன. இது பொதுவிதி.
கவந்தனின் உடம்பு, பிற உடம்புகள் போல். ஐம்பூதங்களால்ஆனது அன்று;
பஞ்ச மகா பாதகங்கள் ஒன்று திரண்டு கவந்தனின்மேனி ஆயின என்கிறார்,
கற்பனைவல்ல கம்பர். தற்குறிப்பேற்றஅணி. ஐந்து பூதங்கள்; மண், நீர்,
அனல், காற்று, வான் ஐந்துபாதகங்கள் கொலை, களவு, காமம், பொய், கள்
உண்ணல்; வேறுவகையில் கூறுதலும் உண்டு.                       15