3658. | வெய்ய வெங் கதிர்களை விழுங்கும் வெவ் அரா, செய் தொழில் இல, துயில் செவியின் தொள்ளையான்; பொய் கிளர் வன்மையில் புரியும் புன்மையோர் வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான். |
வெய்ய வெங் கதிர்களை விழுங்கும் - வெப்பமானதும் விரும்பத் தக்கதுமான ஒளிக்கதிரை முறையே வீசுகின்ற சூரியனையும் சந்திரனையும் விழுங்குகின்ற; வெவ் அரா - கொடிய இராகு, கேது என்ற பாம்புகள்; செய் தொழில் இல - செய்வதற்கு ஒரு வேலையும் இல்லாதனவாய்; துயில் - உறங்குவதற்கு ஏற்ற; செவியின் தொள்ளையான் - செவித் தொளைகளை உடையவன் - மேலும்; கிளர் வன்மையில் - மிகுந்து பெருகுகின்ற கொடுமையினால்; பொய் புரியும் - பொய்யான (பாவச்) செயல்களைச் செய்கின்ற; புன்மையோர் - அற்பர்களாகிய பாவிகள்; வைகுறும் - வாழ்கின்ற; நரகையும் - நரகத்தைக் கூட; நகும் - (தனக்கு ஈடாக முடியுமா என்று) கேலி செய்யக் கூடிய; வயிற்றினான் - வயிற்றினைஉடையவன். வெய்ய கதிர், வெம்கதிர் எனக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். வெய்ய கதிர், வெப்பமான கிரணங்களை வீசும் ஞாயிறு வெம்மை வேண்டல் என்பது உரிச்சொல் விளக்கம், அஃதாவது விருப்பம். எனவே, வெம்கதிர் என்பது விரும்பத் தகுந்த (குளிர்) கதிர்கள் வீசும் திங்கள். 'கதிர்' என்ற சொல் ஆகுபெயராய் ஞாயிறையும் திங்களையும் குறித்தது. இராகுவும் கேதுவும் கதிர்களை விழுங்கும் வேலை இல்லாதபோது அவை அமைதியாகத் தூங்குவதற்கு ஏற்ற இடமாகக் கவந்தனின் செவித் தொளைகள் அமைகின்றன. கவந்தனின் வயிற்றை நோக்க நரகம் கூடக் கொடுமை குறைந்த இடம் என்கிறார் கவிஞர். பொய் ஒன்றை மட்டும் குறித்தாரேனும் உபலட்சணத்தால் மற்றப் பாவங்களும் கொள்ளப்படும். 16 |