3659. | முற்றிய உயிர் எலாம் முருங்க வாரி, தான் பற்றிய கரத்தினன், பணைத்த பண்ணையில் துற்றிய புகுதரும் தோற்றத்தால், நமன் கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான். |
முற்றிய உயிர் எலாம் - முற்றுகையிடப்பட்ட உயிர்கள் யாவும்; முருங்க வாரி - அழியும்படியாக வாரியெடுத்து; தான் பற்றிய கரத்தினன் - தான் பற்றிக் கொண்ட கைகளை உடையவனாய்; பணைத்த பண்ணையில் - (கூட்டமாகப்) பெருகிய தொகுதியாக; துற்றிய - திணிக்கப்படும் உயிரினங்கள்; புகுதரும் தோற்றத்தால் - (கவந்தன் வயிற்றில் அமைந்த வாய்க்குள்ளே) புகுகின்ற காட்சியால்; நமன் - கூற்றுவனுடைய; கொற்ற வாய்தல் செயல் - வெற்றி கொண்ட வாசலில் உயிர்கள் நுழைகின்றதை; குறித்த வாயினான் - (உவமையாகக்) குறிக்கத் தக்க வாயினை உடையவன். கானகத்தின் பல பக்கங்களிலும் திரிகின்ற உயிரினங்கள் மிகப் பெரிய கவந்தனின் கரங்களுக்கிடையே அகப்பட்டுக் கொள்கின்றன; அப்போது அவை முற்றுகைக்குள் சிக்கியவை ஆகின்றன. முருங்குதல்; அழிதல். பண்ணை; கூட்டம். கூற்றுவன் உயிர்களைப் பற்றுதலில் வெற்றியையன்றித் தோல்வி அறியாதவன்; ஆகையால், அவன் வாசல் கொற்ற வாயில் எனப்பட்டது. வாய்தல்; வாசல். கூற்றுவனது நகர் வாசல் கவந்தன் வாய்க்கு உவமை. 17 |