3661. தாக்கிய தணப்பு இல்
     கால் எறிய, தன்னுடை
மேக்கு உயர் கொடு முடி
     இழந்த மேரு நேர்
ஆக்கையின் இருந்தவன்
     தன்னை, அவ் வழி,
நோக்கினர் இருவரும்,
     நுணங்கு கேள்வியார்.

    தாக்கிய தணப்பு இல் கால் எறிய - மோதியதும் தடங்கல்
இல்லாததுமாகிய காற்றுச் சிதைத்தலால்; மேக்கு உயர் தன்னுடைக்கொடு
முடி இழந்த -
மேல் நோக்கி உயர்ந்த தன்னுடைய சிகரத்தைஇழந்த;
மேரு நேர் - மேரு மலையைப் போன்ற; ஆக்கையின்இருந்தவன்
தன்னை -
உடம்போடு இருந்தவனாகிய கவந்தனை;அவ்வழி - அப்போது;
நுணங்கு கேள்வியார் இருவரும் -நுட்பமான கேள்வியறிவுடைய
இராமலக்குவர் இருவரும்; நோக்கினார்- கண்டனர்.

     தாக்கிய கால், தணப்பு இல் கால் எனக் கூட்டிப் பொருள்கொள்க.
கால்; காற்று. வசிட்ட முனிவரிடம் கரை பிறிது இல்லாஉவளரு
மறையினொடு ஒழிவு அறு கலைகள் (303) கேட்டுப்பயின்றவராதலின்
நுணங்கிய கேள்வியர் என்றார். வசிட்டரே குறித்தவண்ணம் விசுவாமித்திர
முனிவரிடமிருந்து அளவு இல் விஞ்சைகள்(329) பெற்றவன் இராமன்
என்பதும் நினையத்தக்கது. சிகரம் இழந்தமேரு, தலை என ஓர் உறுப்பு
இல்லாத கவந்தனுக்கு உவமை. தலைஇன்மையும் பேருருவும் பொதுத்
தன்மைகள். ஆதிசேடனுக்கும்காற்றிறைவனுக்குமிடையே நடந்த போட்டியில்
மேரு தன் சிகரத்தைஇழந்ததொரு கதை.                          19