இராமலக்குவர் கவந்தன் வாயைக் கண்டு கருதியவை

3662. நீர் புகு நெடுங் கடல்
     அடங்கு, நேமி சூழ்
பார் புகு நெடும் பகு
     வாயைப் பார்த்தனர்;
'சூர் புகல் அரியது ஓர்
     அரக்கர் தொல் மதில்
ஊர் புகு வாயிலோ இது?'
     என்று, உன்னினார்.

    நீர் புகு - ஆறுகள் புகுகின்ற; நெடுங்கடல் - பெரிய
கடல்களெல்லாம்; அடங்கு - தன்னுள் அடங்கப்பெற்ற; நேமி சூழ் -
சக்கரவாள மலையால் சூழப்பட்டுள்ள; பார்புகு - உலகமே நுழையும்
படியாக உள்ள; நெடும் பகு வாயைப் பார்த்தனர் - பெரிய தாயும்
பிளந்துள்ளதாயும் உள்ள (கவந்தனது) வாயைப் பார்த்து; இது -
இந்தப் பிளவு; சூர் புகல் அரியது - தேவர்களும் உட்புகுதற்கு
அரிய; ஓர் அரக்கர் - அரக்கருக்கு உரியதாகிய; தொல்மதில் ஊர்
புகுவாயிலோ -
பழமையான மதில் அமைந்த ஊருக்குள் புகுகின்ற
வாசலோ; என்று உன்னினார் - என்று இராமலக்குவர் கருதினார்கள்.

     நெடுங்கடலில் புகுதலைப் பின்னர் கூறினமையால் நீர் என
முதலிற் சொன்னது ஆகுபெயராய் ஆறுகளைச் சுட்டிற்று. கடலைச்
சூழ்ந்து உலக எல்லையில் வட்டமாக ஒரு மலை இருப்பதாகச்
சொல்வது புராண மரபு. நேமி : சக்கரம்; சக்கரம் போல் வட்டமாக
அமைந்த சக்கரவாள மலை. சூர் : தேவர்; கதிரவன் ஒளி புகா....
மதிள் (4657) என இலங்கை மதிலைக் கம்பர் குறிப்பது கொண்டு
இவ்வாறு பொருள் கொள்ளலும் பொருத்தமே. 'இரு சுடர் மீதினில்
இயங்கா மும்மதிள் இலங்கை' என்பது திருமங்கை யாழ்வார் வாக்கு
(திருவெழு கூற்றிருக்கை 3-4) ஆழ்வாரின் இவ்வாக்கே கம்பர்
கற்பனைக்கு மூலமாக இருத்தல் கூடும். பார்த்தனர் - முற்றெச்சம்.      20