இலக்குவன் தெளிவு 3663. | அவ் வழி இளையவன் அமர்ந்து நோக்கியே, 'வெவ்வியது, ஒரு பெரும் பூதம், வில் வலாய்! வவ்விய தன் கையின் வளைத்து, வாய்ப் பெயும்; செய்வது என் இவண்?' என, செம்மல் சொல்லுவான்; |
அவ்வழி - அப்போது அவ்விடத்திலே; இளையவன் - இளையவனாகிய இலக்குவன்; அமர்ந்து நோக்கியே - ஆற அமர (நிதானமாக)ப் பார்த்து; வில்வலாய்! - வில் வித்தை வல்லவனே (என இராமனை விளித்து); வெவ்வியது ஒரு பெரும் பூதம் - இது கொடுமையான ஒரு பூதம்; வவ்விய - பிடித்துப் பற்றிக் கொண்ட உயிர்களை; தன் கையின் வளைத்து - தன் கையினால் வளைத்துப் பிடித்து; வாய்ப் பெயும் - தன் வாய்க்குள்ளே இட்டுக் கொள்ளுவது (இப் பூதத்தின் செயல்); இவண் செய்வது என் - இவ்விடத்தில் நாம் என்ன செய்யலாம்; என - என்று வினவ; செம்மல் சொல்லுவான் - இராமபிரான் பின்வருமாறு விடை சொன்னான். அரக்கர்தம் மதில் வாயிலோ என்று ஐயுற்ற நேரத்தில், இலக்குவன் நிதானமாகக் கவனித்தான்; கரங்களால் உயிரினங்களைக் கவர்ந்து விழுங்கும் வாயே தாம் கண்ட பிளவு எனத் தெளிந்து கூறினான். கவந்தன் கைகளால் வளைக்கப்பட்ட உயிர்களுள் இவ் இருவரும் அடங்குவர். "பூதத்தின் வாயில் திணிக்கப்படும் நிலையில் சிக்கிக் கொண்டோமே, செய்யத்தக்கது இதுவெனத் தெரியவில்லையே" என்பது இலக்குவன் வினா. 21 |