'பழி சுமந்து வாழேன்' என்று, இராமன் கூறல்

3664.'தோகையும் பிரிந்தனள்;
     எந்தை துஞ்சினன்;
வேக வெம் பழி சுமந்து
     உழல வேண்டலேன்;
ஆகலின், யான்,
     இனி, இதனுக்கு ஆமிடம்;
ஏகுதி ஈண்டுநின்று,
     இளவலே!' என்றான்.

    இளவலே - என் தம்பியே; தோகையும் பிரிந்தனள் -
(கானகம் வந்தபின்) மயில் போன்ற சாயல் கொண்ட சீதையும்
பிரிந்தாள்; எந்தை துஞ்சினன் - தந்தை முறையினனாகிய சடாயுவும்
இறந்தான்; வேக வெம் பழி சுமந்து - (இவ்வாறு எனக்கு
அரியராகிய இருவரையும் பேண முடியாமையால்) விரைந்து
பரவக்கூடிய கொடிய பழியைச் சுமந்து கொண்டு; உழல
வேண்டலேன் -
உயிர் கொண்டு அலைய நான் விரும்பவில்லை;
ஆதலின் - ஆகையால்; யான் இனி இதனுக்கு ஆமிடம் - நான்
இனிமேல் இப்பூதத்துக்கு உணவு ஆவேன்; ஈண்டு நின்று ஏகுதி
என்றான்? -
இங்கிருந்து நீ தப்பிப் போவாயாக என்றான்.

     தோகை - முதலில் மயிலுக்கு ஆகி, அடுத்து மயிலனைய சாயல்
கொண்ட சீதைக்கு ஆகி வந்த இருமடி ஆகுபெயர். தோகையும்
என்பதில் உம்மை எதிரது - தழீஇய எச்சவும்மை. ஆமிடம் -
ஆமிஷம் என்ற வட சொல்லின் தமிழ் வடிவம்; உணவு என்னும்
பொருள் உடையது; பின்னரும் இச்சொல் ஆளப்பட்டுள்ளது (4806)    22