3665. | 'ஈன்றவர் இடர்ப்பட, எம்பி துன்புற, சான்றவர் துயருற, பழிக்குச் சார்வுமாய்த் தோன்றலின், என் உயிர் துறந்தபோது அலால், ஊன்றிய பெரும் படர் துடைக்க ஒண்ணுமோ? |
ஈன்றவர் இடர்ப்பட - பெற்றோர் துன்பம் அடையவும்; எம்பி துன்புற - என் தம்பியாகிய பரதன் துன்பப்படவும்; சான்றவர் துயர் உற - பெரியவர்கள் வருத்தமுறவும்; பழிக்குச் சார்வுமாய் - (உற்றாரும் பெரியோரும் துன்பமடையக் காரணன் ஆனதோடு, மனையாளையும் சடாயுவையும் காப்பாற்ற முடியாத) பழிக்கு இடமாகி; தோன்றலின் - யான் தோன்றியுள்ளமையால்; என் உயிர் துறந்த போது அலால் - என் உயிரை விட்டபோதன்றி; ஊன்றிய பெரும் படர் - நிலைத்துவிட்ட இப் பெரும்பழியை; துடைக்க ஒண்ணுமோ - அழிக்க முடியுமா? 'தோன்றிற் புகழோடு தோன்றுக' என்ற குறள் நெறிக்கு எதிர் மறையாகப் பழியோடு தோன்றியதாகக் குறித்தார் கவிச்சக்கரவர்த்தி; இங்கே எதிர்மறுத்து எதிரொலிப்பதை உணர்க. ஓகாரம் எதிர்மறை. 23 |