3666.' "இல் இயல்புடைய, நீர்
     அளித்த, இன் சொலாம்
வல்லி, அவ் அரக்கர்தம்
     மனை உளாள்" எனச்
சொல்லினென், மலை எனச்
     சுமந்த தூணியென்,
வில்லினென், செல்வெனோ,
     மிதிலை வேந்தன்பால்?

    "இல் இயல்புடைய - இல்லத்திற்கு ஏற்ற பண்பு கொண்ட; நீர்
அளித்த -
நீங்கள் எனக்குக் கொடுத்த; இன்சொலாம் வல்லி -
இனிய சொற்கள் பேசும் கொடி போன்ற சீதை; அவ்வரக்கர் தம்
மனை உளாள் -
அந்த அரக்கர்களின் வீட்டில் இருக்கிறாள்
(அவளை அங்கே விட்டு நான் மட்டும் வந்தேன்)"; எனச்
சொல்லினென் -
என்று சொல்லிக் கொண்டு; மலையெனச் சுமந்த
தூணியென் வில்லினென் -
மலை போன்ற அம்பறாத் தூணியைச்
சுமந்தவனாகியும் (மலைபோன்ற) வில்லைச் சுமந்தவனாகியும்; மிதிலை
வேந்தன் பால் செல்வெனோ -
மிதிலை மன்னனாகிய சனகனிடம்
போவேனோ (போகமாட்டேன்)."

     சனகன் மகளை இல்லறத்துக்கு ஏற்றவளாகவே இராமனுக்குக்
கொடுத்தான்; ஆதலின், மாண்பமை இல்லத்தரசியைத் துறத்தற்கோ
மீட்காமல் வருதற்கோ காரணம் இல்லை. இல் - மனையறத்தைக்
குறித்த ஆகுபெயர். வல்லி : கொடி போன்று ஒல்கும் சீதைக்கு
ஆகுபெயர். சொல்லினென், தூணியென், வில்லினென் என்ற முற்றெச்சங்கள்
செல்வெனோ என்ற வினா கொண்டு முடிந்தன. மனையாளை மீட்க
முடியாதவனுக்கு மலையனைய அம்பறாத் தூணியும் வில்லும் வெற்று
அணிகலனாய் அமைகின்ற எள்ளல் நிலை உணர்ந்து இராமபிரான்
வேதனைஉறுகிறான்.                                           24