3667. | ' "தளை அவிழ் கோதையைத் தாங்கல் ஆற்றலன், இளை புரந்து அளித்தல்மேல் இவர்ந்த காதலன், உளன்" என, உரைத்தலின், "உம்பரான்" என விளைதல் நன்று; ஆதலின், விளிதல் நன்று' என்றான். |
"தளை அவிழ் கோதையை - முறுக்கு அவிழும் மலர்களாகிய மாலை போன்ற சீதையை; தாங்கல் ஆற்றலன் - காப்பாற்றும் ஆற்றல் இல்லாதவனாய்; இளை புரந்து அளித்தல் மேல் - நிலவுலகத்தை ஆட்சி செய்து காப்பாற்றுவதில்; இவர்ந்த காதலன் உளன் - மிகுகின்ற ஆசை உடையவனாய் இராமன் வாழ்கிறான்; என உரைத்தலின் - என்று உலகவர் பழி சொல்லுவதை விட; 'உம்பரான் என - இராமன் தேவருலகத்தான் எனச் சொல்லும்படியாக; விளைதல் நன்று - செயல்கள் நடைபெறுதலே நன்று; ஆதலின் விளிதல் நன்று- ஆகையால் (நான்) சாவதே நல்லது"; என்றான் - என இராமபிரான் கூறினான். மாலை போல் மெல்லியல் சீதை என்ற பெண்; அந்த மெல்லியலைக் காப்பாற்ற முடியாதவனுக்கு, 'இந்த உலகத்தையே காப்பாற்ற வேண்டும்' என்ற ஆசை இருக்கலாமா' என்று உலகம் பழிக்கும். அந்தப் பழிச்சொல் பிறப்பதை விட 'இராமன் மானம் பெரிதெனப் போற்றி இறந்து போனான்' என்று உலகம் சொல்லும்படியாகச் செயல் நடப்பதே நல்லது என்கிறான் இராமன். 25 |