3671.'என் தாய், "உன்முன் ஏவிய யாவும்
     இசை; இன்னல்
பின்றாது எய்தி, பேர்
     இசையாளற்கு அழிவு உண்டேல்,
பொன்றாமுன்னம் பொன்றுதி"
     என்றாள்; உரை பொய்யா
நின்றால் அன்றோ நிற்பது
     வாய்மை நிலை அம்மா?

    "என் தாய்- -;உன்முன் ஏவிய யாவும் இசை - உன் தமையனாகிய
இராமன் ஏவியவற்றையெல்லாம் ஏற்றுச் செயல்படுக; இன்னல் பின்றாது
எய்தி -
துன்பம் நேருமாயின் அத்துன்பங்கண்டு பின்வாங்கி விடாமல்
அதனை நீ ஏற்று; பேர் இசையாளற்கு அழிவு உண்டேல் - பெரும்
புகழாளன் ஆகிய இராமனுக்கு அழிவு நேரிடுவதாக இருந்தால்;
பொன்றா முன்னம் - அவன் இறப்பதற்கு முன்னர்; பொன்றுதி - நீ
இறப்பாயாக"; என்றாள் - என்று எனக்குச் சொன்னாள்; உரை
பொய்யா நின்றால் அன்றோ -
என் தாயின் சொல் பொய்த்திடா
வண்ணம் அவள் இட்ட கட்டளைப்படி நான் நடந்து கொண்டால்
அன்றோ; வாய்மை நிலை நிற்பது - சத்கிய நெறி நிலை
பெறுவதாகும்?

     'மா காதல் இராமன்' (1751) 'இவன்' (1752) என்றே சுமித்திரை
சொல்லாக அயோத்தியா காண்டத்தில் கம்பர் குறித்தார். அவரே
இலக்குவன் கூற்றாக இராமனைப் 'பேரிசையாளன்' என்று இங்கே
குறிக்கிறார். பேரிசையாளன் (பெரும் புகழாளன்) என்று தன் தாய்
சொன்னதாக இலக்குவன் கூறுகிறான். இரண்டு இடத்தும் இராமனைப்
புகழுக்கு உரியவனாகவே கம்பர் கருதுகிறார். முன்னே அக் கருத்து
குறிப்பாக வந்தது; இங்கே வெளிப்படையாக வந்துள்ளது. தாய்
சொல்லைப் பேணாது போதல் அஞ்சுதற்கு உரியது என்னும் குறிப்புக்
கொண்டது இறுதியில் வரும் 'அம்மா' என்னும் இடைச்சொல்.          29