3672.'என்-பெற்றாளும், யானும்,
     எனைத்து ஓர் வகையாலும்,
நின்-பெற்றாட்கும், நிற்கும்,
     நினைப்புப் பிழையாமல்,
நல் பொன் தோளாய்! நல்லவர்
     பேண நனி நிற்கும்
சொல் பெற்றால், மற்று ஆர்
     உயிர் பேணி, துறவேமால்.

    "நல் பொன் தோளாய் - அழகியதும் பொன் அணி
பூண்டதுமாகிய தோளினை உடையவனே; என் பெற்றாளும் யானும்-
என் தாயும் யானும்; எனைத்து ஓர் வகையாலும் -எவ்விதத்தாலும்; நின்
பெற்றாட்கும் நிற்கும் -
உன்னைப் பெற்றகோசலைக்கும் உனக்கும்;
நினைப்புப் பிழையாமல் - கருத்துமாறுபடாத வண்ணம்; நல்லவர்
பேண -
நல்லவர்கள்போற்றும்படியாக; நனி நிற்கும் சொல் பெற்றால் -
நன்றாக உங்கள்சார்பில் நிற்கிறோம் என்னும் புகழுரை பெறுவதாயிருந்தால்;
மற்றுஆர் உயிர் பேணி - (அந்தப் புகழுரையே பெரிது எனக்
கருதுவோமேயல்லாமல்) அதற்கு மாறாக அரிய உயிரே பெரிது எனப்
பேணி; துறவேம் - (உங்கள் இருவரையும்) விட்டு விலகிவிடமாட்டோம்.

     சுமித்திரைக்கும் தனக்கும் கோசலை சார்பிலும் இராமன்
சார்பிலும் உறுதியாக நின்று பேணுதலே உரிய நெறி என்கிறான்
இலக்குவன். என் தாய்க்கும் எனக்கும் உன் தாய்க்கும் உனக்கும்
என்ற சொற் கிடக்கை முறை நிரல் நிரையாகும். சுமித்திரை கோசலை
சார்பிலும் இலக்குவன் இராமன் சார்பிலும் நிற்றலே பெரிதெனப்
பேணுவள் என்பது கருத்து. இந்நெறியைப் பேணுவோர் இவர்' எனல்
சான்றோரிடம் நற்பெயர் பெறுவதைவிட தங்கள் உயிரைப் பெரிதென
இவர்கள் கருதார்.                                          30