3673.'ஓதுங்கால், அப் பல் பொருள்
     முற்றுற்று, ஒருவாத
வேதம் சொல்லும் தேவரும்
     வீயும் கடை வீயாய்;
மாதங்கம் தின்று உய்ந்து இவ்
     வனத்தின்தலை வாழும்
பூதம் கொல்லப் பொன்றுதிஎன்னின்,
     பொருள் உண்டோ?

    ஓதுங்கால் - உண்மை நிலையினை எடுத்துச் சொல்வதானால்;
அப் பல்பொருள் முற்றுற்று - எங்கெங்கும் உள்ள அந்த எல்லாப்
பொருள்களும் அழிந்து; ஒருவாத வேதம் சொல்லும் தேவரும்
வீயும் கடை -
எக்காலும் அழியாத வேதம் ஓதும் தேவர்கள் அழியும்
காலத்திலும்; வீயாய் - நீ அழியமாட்டாய் -(உண்மை இதுவாயிருக்க);
மாதங்கம் தின்று உய்ந்து - யானை (முதலியவற்றைத்) தின்று உயிர்
பெற்று; இவ் வனத்தின் தலை வாழும் - இந்தக் காட்டிலே
வாழ்கின்ற; பூதம் கொல்லப் பொன்றுதி - பூதம் கொல்வதால் நீ
இறந்துவிடுவாய்; என்னின் - என்று சொன்னால்; பொருள் உண்டோ
-
அவ்வாறு சொல்வதில் பொருள் உண்டா (அவ்வாறு சொல்வது
பொருந்தாது என்பது கருத்து).

     அகரச் சுட்டு உலகறி சுட்டு நெஞ்சறி சுட்டு. எல்லார்க்கும்
தெரிந்ததே என்ற கருத்துடையது. 'விண்ணோர் அமுது உண்டும் சாவ'
என்பதால் சாவாமை தரவல்ல அமுதம் உண்ட தேவர்களும் சாவர்
என்று கொள்வது நூல் வழக்கு. அண்ட சராசரங்களும் தேவர்களும்
அழிந்தாலும் இராமனுக்கு அழிவு இல்லை என்பது குறிப்பு. அவ்வாறு
ஆவது அவன் பரம்பொருள் என்பதால். 'காற்றை முன்னுடைப்
பூதங்கள்; அவை சென்று கடைக்கால் வீற்று வீற்று உற்று வீவுறும்; நீ
என்றும் விளியாய்' (10058) என்று பிரமன் இராமனைக் குறித்தல் இங்கு
நினையத்தக்கது. மாதங்கம் : யானை, மதங்கர் என்ற முனிவரால்
பேணப்பட்டமையின் யானைக்கு மாதங்கம் எனப் பெயர்; தத்திதாந்தப்
பெயர் வந்தது.                                               31