3674. | 'கேட்டார் கொள்ளார்; கண்டவர் பேணார்; "கிளர் போரில் தோட்டார் கோதைச் சோர் குழல்தன்னைத் துவளாமல் மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான், செரு வெல்ல மாட்டான், மாண்டான்" என்றலின்மேலும் வசை உண்டோ? |
கேட்டார் - (தளர்ந்து உயிர்விடத் துணிந்த உன் நிலை பற்றிக்) கேள்விப் பட்டவர்கள்; கொள்ளார் - உன் முடிவை ஏற்கமாட்டார்கள்; கண்டவர் பேணார் - நேரிலேயே காண நேரிட்டவர்கள் உன் செயலை விரும்பமாட்டார்கள்; 'கிளர் போரில் - (சீதையை மீட்கும் பொருட்டுக்) கிளர்ந்தெழுகின்ற போரிலே; தோடு ஆர் கோதைச் சோர் குழல் தன்னை - தொகுதியான மாலையணிந்து வாழும் கூந்தலாளான சீதையை; துவளாமல் மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான் - தளராமல் மீட்டுவிட்டான் என்று உலகவர் சொல்லும் பெரிய புகழைக் கொள்ளாதவனாய்; செரு வெல்ல மாட்டான் - போரிலே வெற்றி கொள்ள முடியாதவனாய்; மாண்டான் - இராமன் இறந்தான்; என்றலின் மேலும் - என்று சொல்லப்படுவதைவிட; வசை உண்டோ - பழி உண்டோ?' பேணுதல் - விரும்புதல், தோடு + ஆர் = தோட்டார்; தோடு - தொகுதி; இங்கே மலர்களின் தொகுதி. கிளர் போர், சோர் குழல்;வினைத் தொகைகள் - சோர்குழல் வினைத் தொகைப் புறத்துப் பிறந்தஅன்மொழித் தொகை; இங்கே சீதை கொள்ளான், மாட்டான் -முற்றெச்சங்கள். 32 |