3675. | 'தணிக்கும் தன்மைத்து அன்றுஎனின், இன்று இத் தகை வாளால், - கணிக்கும் தன்மைத்து அன்று, விடத்தின் கனல் பூதம் - பிணிக்கும் கையும், பெய் பில வாயும் பிழையாமல் துணிக்கும் வண்ணம் காணுதி; துன்பம் துற' என்றான். |
"விடத்தின் கனல் பூதம் - நஞ்சுபோல் எரிக்கும் இந்தப் பூதம்; இன்று இத் தகை வாளால் - இன்றைக்கு இந்தத் தகுதிமிக்க வாளால்; தணிக்கும் தன்மைத்து அன்று எனின் - வெட்டித் துணிக்கத்தக்கது அன்று என்றால்; கணிக்கும் தன்மைத்து அன்று - நம்மால் வேறு வகையில் மதிப்பிடத் தக்கதன்று; பிணிக்கும் கையும் பெய் பில வாயும் - தன் எல்லைக்குள் உள்ளவற்றையெல்லாம் கட்டிப்பிடிக்கின்ற கையையும் சிக்கியவற்றையெல்லாம் பெய்கின்ற குகை போன்ற வாயையும்; பிழையாமல் - குறி தப்பாமல்; துணிக்கும் வண்ணம் காணுதி - துண்டாக்கிப் பிளக்கும் தன்மையைக் காண்பாயாக; துன்பம் துற - துயரத்தை விடுவாயாக; என்றான் - என்று இலக்குவன் கூறினான். இப் பூதம் நம் வாளால் துணிக்கத்தக்கதே அன்றி வேறுவகையால் மதிக்கத் தக்கதன்று என்பது கருத்து. 33 |