ஒருவரை ஒருவர் முந்துதல்

3676. என்னா முன்னே, செல்லும்
     இளங்கோ, இறையோற்கு
முன்னே செல்லும்; முன்னவன்,
     அன்னானினும் முந்த,
தன் நேர் இல்லாத் தம்பி
     தடுப்பான்; பிறர் இல்லை;
அன்னோ! கண்டார் உம்பரும்
     வெய்துற்று அழுதாரால்.

    என்னா - என்று சொல்லிக் கொண்டு; முன்னே செல்லும்
இளங்கோ -
பூதத்தைத் துணிப்பதற்காக முந்துகின்ற இலக்குவன்;
இறையோற்கு முன்னே செல்லும் - தலைவனாகிய இராமனுக்கு
முன்னாலே முனைந்து சென்றான்; முன்னவன் - மூத்தவனாகிய
இராமன்; அன்னானினும் முந்த - அந்த இலக்குவனுக்கு முன்னாக
முனைந்து செல்ல; தன் நேர் இல்லாத் தம்பி தடுப்பான் - தனக்கு
வேறு எவரும் ஒப்பில்லாத தம்பியாகிய இலக்குவன் இராமனைத்
தடுத்திடுவான்; பிறர் இல்லை - இப்படிப் போட்டி போட்டுக்
கொண்டு ஒருவருக்கு ஒருவர் முந்துவோர் இவர்களைத் தவிர வேறு
எவரும் எங்கும் இல்லை; கண்டார் உம்பரும் - இந்தப் போட்டியைக்
கண்டவர்களாகிய தேவர்களும்; வெய்துற்று அழுதார் - தவிப்புற்று
அழுதனர்; அன்னோ - ஐயோ!; ஆல் - ஈற்றசை.

     இப்படிச் சகோதர நேயம் செயல்படுவது கண்டு உள்ளம்
உருகிய தேவர்கள் கூட உருக்கத்தால் அழுதனர். விருப்பு வெறுப்பு
நிலை கடந்தவரையும் உருக்கும் உணர்வு நிலையைச் சித்திரிக்கும்
கவிஞராலும் பொறுக்க முடியவில்லை; ஐயோ (அன்னோ) என்ற
இரக்கக் குறிப்பு கவந்தனை முற்று முன்னரே இடையே பிறக்கிறது.
அழுதார் என்று நிறுத்தாமல் அழுதாரால் என்று அசை
சேர்த்தமையால் ஏற்படும் நயம், பாடி ஓதுவார்க்கு விளங்கும். உணர்வு
நிலையால் எழும் உருக்கத்தை முன்னிறுத்தும் அருமைத் திருப்பாடல்.   34

     கவந்தன் கரங்களை வீழ்த்தல்