3678.'அழிந்துளார் அலர்; இகழ்ந்தனர் என்னை'
     என்று அழன்றான்;
பொழிந்த கோபத்தன்; புதுப்பொறி
     மயிர்ப்புறம் பொடிப்ப,
'விழுங்குவேன்' என வீங்கலும்,
     விண் உற, வீரர்,
எழுந்த தோள்களை வாள்களால்
     அரிந்தனர், இட்டார்.

    'அழிந்துளார் அலர் - என்னைக் கண்டும் இவர்கள்
தளரவில்லை; இகழ்ந்தனர் என்னை - அஞ்சித் தளராமல் உரமாக
நிற்பதால் இவர்கள் என்னை அவமதித்து விட்டனர்'; என்று
அழன்றான் -
என்று எண்ணிக் கவந்தன் சினம் மூண்டான்;
பொழிந்த கோபத்தன் - பொங்கிப் பொழியும் சினம் கொண்டவனாய்;
புதுப் பொறி மயிர்ப்புறம் பொடிப்ப - புதிதாய் தோன்றிய சினத்
தீப்பொறி, மயிர்க் கால் தொறும் தோன்ற; "விழுங்குவேன்" என
வீங்கலும் -
'இவர்களை விழுங்கிடுவேன்' எனக் கிளம்பிய அளவில்;
விண் உற எழுந்த தோள்களை - ஆகாயம் அளாவி எழுந்த
கவந்தனின் தோள்களை; வீரர் - வீரம் கொண்ட இராமலக்குவர்;
வாள்களால் அரிந்தனர் இட்டார் - வாள்களால் வெட்டி
வீழ்த்தினார்கள்.

     இயல்பாகவே சினப்பொறி தோன்றுகின்ற தோற்றத்தான்,கவந்தன் :
இராமலக்குவர் அவனைக் கண்டும் அஞ்சாது நின்றுஉருத்து நோக்கியதால்
புதிதாகச் சினப்பொறி தோன்றியது என்பார்,'புதுப் பொறி' என்றார்.     36