கரம் வெட்டுண்ட கவந்தன் தோற்றம்

3679.கைகள் அற்று வெங் குருதி
     ஆறு ஒழுகிய கவந்தன்,
மெய்யின், மேற்கொடு கிழக்கு
     உறப் பெரு நதி விரவும்,
சைய மா நெடுந் தாழ்
     வரைத் தனி வரைதன்னோடு,
ஐயம் நீங்கிய, பேர்
     எழில் உவமையன் ஆனான்.

    கைகள் அற்று - கைகள் அறுக்கப் பெற்றதால்; வெங்குருதி
ஆறு ஒழுகிய கவந்தன் -
வெப்பமான இரத்த ஆறு பெருகிய
கவந்தன்; மெய்யின் - உடலின் தோற்றத்தால்; மேற்கொடு கிழக்கு
உற -
மேற்கிலிருந்து கிழக்கு நோக்கப் பெருகிவரும்; பெரு நதி
விரவும் -
பெருமைக்குரிய காவிரியாறு பொருந்திய; சைய மா நெடுந்
தாழ்வரைத் தனிவரை தன்னோடு -
சைய மலை என்னும்
பெயருடைய பெரியதும் தாழ்ந்து விரிந்த அடி வாரம் கொண்டதுமாகிய
ஒப்பற்ற மலையோடு; ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன்
ஆனான் -
ஐயத்துக்கு இடம் இல்லாத பேரழகு உடைய
உவமையனாகக் காணப்பட்டான்.

     காவிரி பெருகி வரும் சையமால் வரைபோல் இருபாலும் குருதி
பாயும் கவந்தனின் உடம்பு தோற்றமளித்தது என்கிறார். மேற்குத்
தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி சைய மலை; காவிரி அங்கே
பெருகுகிறது. மலையின் இருபாலும் காவிரி நீர் பாயும் தோற்றம்
பேரழகாகவே இருக்கும். அந்த இயற்கையழகில் ஈடுபட்ட கம்பருக்குக்
கவந்தனின் குருதிப் பெருக்கத்தில் உள்ள கொடுமை உறைக்கவில்லை.
அந்த அழகு நாட்டம் இந்தக் கொடுமையை விழுங்கிவிட்டது சைய
மலையைக் குறித்ததால் செய்யுளில் வந்த பெருநதி என்றது
காவிரியாயிற்று. அந்த நதி அங்கே பெருகுதலால்.                37