கவந்தனின் புதுத் தோற்றம் 3680. | ஆளும் நாயகன் அம் கையின் தீண்டிய அதனால், மூளும் சாபத்தின் முந்திய தீவினை முடித்தான்; தோளும் வாங்கிய தோமுடை யாக்கையைத் துறவா, நீளம் நீங்கிய பறவையின், விண் உற நிமிர்ந்தான். |
ஆளும் நாயகன் - உயிர்க் கூட்டத்தை ஆண்டருளும் பரமனாகிய இராமன்; அம் கையின் - தன் அழகிய கையினால்; தீண்டிய அதனால் - தொட்டதினால்; மூளும் சாபத்தின் - மிகுந்த சாபத்தினால்; முந்திய தீவினை முடித்தான் - எம் முயற்சிக்கும் முந்துவதாகிய தீவினைப் பயனை ஒழித்தான்; தோளும் வாங்கிய - தோளும் அறுபட்ட; தோம் உடை யாக்கையைத் துறவா - குற்றம் உடைய உடம்பினைத் துறந்து; நீளம் நீங்கிய பறவையின் - கூட்டை விட்டு வெளியேறிய பறவையைப் போல; விண் உற நிமிர்ந்தான் - வானத்தின் உயரிடத்திலே தோன்றினான். இராமபிரானின் படைக்கலத்தான் தீண்டப் பெற்றவர்கள் வினைப்பயன் நீங்கியவராய்ப் பெரும்பேறு பெறுவதாகக் கூறுவது கம்பராமாயணத்தின் சிறப்புப் போக்கு. அவ்வாறு தீண்டுவது பரமன்அருள்கின்ற தீட்சை ஆகிறது. கைக்கு அழகாவது நற்பயன் அருளும்திறம். 'மற்றொன்று சூழினும் தான் முந்துறும்' (குறள். 380) என்றவள்ளுவர் வாக்கினை நினைந்து 'முந்திய தீவினை' என்றார். தோளும்என்பதிலுள்ள உம்மை இசை நிறை (ஓசை நிரப்புவதற்காக வரும்அசை) நீளம் : கூடு. 38 |