3681. | விண்ணில் நின்றவன், 'விரிஞ்சனே முதலினர் யார்க்கும் கண்ணில் நின்றவன் இவன்' எனக் கருத்துற உணர்ந்தான்; எண் இல் அன்னவன் குணங்களை, வாய் திறந்து, இசைத்தான்; புண்ணியம் பயக்கின்றுழி அரியது எப் பொருளே? |
விண்ணில் நின்றவன் - ஆகாயத்தில் உயர்ந்து நின்ற கவந்தன்; 'விரிஞ்சனே முதலினர் யார்க்கும் கண்ணில் நின்றவன் இவன்' என - பிரமன் முதலான பெருந்தேவர்கள் யாவர்க்கும் கண்ணுறு சோதியாய் நின்ற பரமன் இவன்தான் என்று; கருத்துற உணர்ந்தான் - மனத்தில் பொருந்துமாறு உணர்ந்தான்; எண் இல் அன்னவன் குணங்களை - கணக்கில் அடங்காத அப்பெருமானின் பண்புகளை; வாய் திறந்து இசைத்தான் - வாய்விட்டுப் பாடிக் கூறித் துதிக்கலானான்; புண்ணியம் பயக்கின்றுழி - நல்வினை முன்னின்று பயனை ஊட்டுகின்றபோது; எப்பொருள் அரியது - எந்தப் பொருள்தான் அரியதாகும்? (எளிதில் கைக்கனியாகக் கிட்டும் என்பதாம்). 'விண்ணுற நிமிர்ந்தான்' என முன்பாட்டில் சொன்னவாறே 'விண்ணில் நின்றவன்' என இங்கும் கவந்தனைக் குறித்தார். கண்ணில் நிற்றல் : தியானத்தில் தோன்றிப் பதிதல். விரிஞ்சன் முதலியோரின் தியானப் பொருளாக உள்ள பரம் பொருளே இராம பிரான் என்ற ஞானக் காட்சி கவந்தனுக்கு வாய்த்தது. இறைவனைக் கண்ணன், கண்ணுளான் என்பது மரபு. சிந்தைக்கு எட்டாதது பரம் பொருளாதலின் எண் இல் அன்னவன் என்றார்' என்ணுதற்கு, அரியது எண்ணம் கடந்தது ஆகிய பரம்பொருள் எளிவந்த பாங்கில் (சௌலப்பியம்) கவந்தனுக்கு ஞானக் காட்சி அருளியதால் 'புண்ணியம் பயக்கின்றுழி அரியது எப்பொருளே என்றார். கவந்தனுக்கு வாய்த்த பேரருட் கொடையினைச் சிறப்புச் செய்தியாகக் கொண்டு, உலகு அறி பெற்றியதாகப் 'புண்ணியம் பயக்கின்றுழி அரியது எப்பொருளே' என்ற பொதுச் செய்தி சுட்டியது வேற்றுப் பொருள் வைப்பணி. 39 |