கவந்தன் இராமனைத் துதித்தல் 3682. | 'ஈன்றவனோ எப் பொருளும்? எல்லை தீர் நல் அறத்தின் சான்றவனோ? தேவர் தவத்தின் தனிப் பயனோ? மூன்று கவடு ஆய் முளைத்து எழுந்த மூலமோ? தோன்றி, அரு வினையேன் சாபத் துயர் துடைத்தாய்! |
தோன்றி - யான் இருக்குமிடத்துக்கே நின் எளிமையால் வந்து காட்சியளித்து; அருவினையேன் சாபத் துயர் துடைத்தாய் - போக்குதற்கு அரிய வினையுடைய என் சாபத்துன்பத்தை அழித்தவனே!; எப்பொருளும் ஈன்றவனோ - எல்லாப் பொருள்களையும் படைத்தவன் நீதானோ; எல்லை தீர் நல் அறத்தின் சான்றவனோ - முடிவில்லாத நல்ல அறத்துக்குச் சாட்சியாக இருப்பவன் நீதானோ; தேவர் தவத்தின் தனிப் பயனோ - தேவர்கள் மேற்கொண்ட தவத்தின் ஒப்பற்ற பயனாக இருப்பவன் நீதானோ; மூன்று கவடு ஆய் முளைத்து எழுந்த மூலமோ - (பிரமன், திருமால், சிவன் என்ற) மூன்று பிரிவாகக் கிளைத்து எழுந்த மூலப் பரம்பொருள் நீதானோ? இயங்கு பொருள் நிலைப் பொருள், உயிர்ப் பொருள் உயிரில் பொருள், உயர்திணை அஃறிணை என்று பல்வேறு பிரிவுகள் எல்லாவற்றையும் படைத்தவன் என்ற கருத்தில் 'எப்பொருளும்' என்றார். பல் வகைகளால் அலைப்புண்டாலும் இறுதியில் தன் ஆற்றலை நிறுவி நிலைத்திருப்பது அறம் ஒன்றே யாதலின் 'எல்லை தீர் நல்லறம்' என்றார். 'மூவராய் முதலாகி மூலம் அது ஆகி' என்று முன்னே (1556) சிவபிரானைக் கம்பர் குறித்தார். 'மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ!' என்று பின்னே (4063) இராமபிரானைக் குறிப்பார் கம்பர். நான்முகனாய் அவனுள்ளிருந்து படைப்பித்தும், திருமாலாய் அவனுள்ளிலிருந்து காத்திடச் செய்தும், சிவனாய் அவனுள்ளிருந்து அழிப்பித்தும் இயக்குவோன்/ இயங்குவோன் ஆதி நாரணனே என்று கொள்வது ஸ்ரீவைணவம் என்பது கருதுக. 'அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனும் தானே' எனச் சைவமும் (திருக்கயிலாய ஞானஉலா-9) கூறுதல் காண்க. 'மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன்தன்னை' (நாலாயிர 2360) என்று நம்மாழ்வார் அருளியது காண்க. 40 |