3683. | 'மூலமே இல்லா முதல்வனே! நீ முயலும் கோலமோ, யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால்; ஆலமோ? ஆலின் அடையோ? அடைக் கிடந்த பாலனோ? வேலைப் பரப்போ? பகராயே! |
மூலமே இல்லா முதல்வனே - தனக்கு ஒரு காரணம் இல்லாமல் எல்லாவற்றுக்கும் காரணனாக இருப்பவனே; நீ முயலும் கோலமோ - நீ உன் சங்கற்பத்தால் கொள்ளும் வடிவங்களோ என்றால்; யார்க்கும் தெரிவு அரிய கொள்கைய - எவராலும் தெரிந்து கொள்ளுதற்கு இயலாத பாங்கு கொண்டவை (உன் உண்மையான உருவம் எனத் தக்கது); ஆலமோ - ஊழிக் காலத்ததாகிய ஆலமரமோ; ஆலின் அடையோ - அந்த ஆலமரத்தின் ஓர் இசையோ; (அன்றி); அடைக் கிடந்த பாலனோ - அந்த ஆல் இலையில் பள்ளி கொள்ளும் பாலனோ; வேலைப் பரப்போ - (ஊழிக் காலத்தில் எங்கும் பொங்கிக் கிடக்கும்) கடற் பரப்போ; பகராய் - (இவற்றுள் எதுதான் உன் உண்மை வடிவமாகக் கொள்ளத்தக்கது என்பதைச்) சொல். காரணம் இன்றிக் காரியம் இல்லை; வித்தின்றி விளைவில்லை. இது பொது விதி. எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது பரம்; அப்பரத்துக்கு ஒரு காரணம் இல்லை. ஒரு காரணத்தின் விளைவாக இருப்பது பரம் ஆகாது. ஒரு முதல் உடையதாய்த் தோன்றுவது எதற்கும் ஒரு முடிவு உண்டு; பரம்பொருள் ஆதி இல்லாதது; எனவே அந்தமும் இல்லாதது. ஆதி அந்தம் இல்லா ஒன்றுதான் எதற்கும் காரணமாதல் கூடும். இத்தகைய தத்துவத்திற்கு ஒரு வடிவம் ஊட்டி உணர்வது சில் வாழ்நாட் சிற்றறிவுடைய சிற்றுயிரின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. ஊழிக் காலத்தே பெரு வெள்ளத்தில் மிதவையாய் உள்ள ஆல் இலையில் பரமன் பாலனாக இருப்பான் என்று, நூல்கள் கூறுகின்றன. ஊழியே முடிவு; எனவே, முடிவின் எல்லையில் பரம்பொருள் கொள்ளும் வடிவே உண்மை வடிவு எனலாமோ என்று வினாவுகிறான் கவந்தன். அப்போதும் தடை எழுகிறது. ஆல் இலைக்குக் காரணம் ஆலமரமாதல் வேண்டும்; அவ்வாலமரத்துக்கு இடம் எது? கடலா!? கடலிலே ஆலமரமா? அறிவுக்கும் உணர்வுக்கும் எட்டாத நிலை......... ஊழிக் கடலா, ஆல மரமா, ஆல் இலையா, இலையில் கிடக்கும் பாலனா....? ஊழியே எட்டாதபோது அவ்வூழி பற்றிய கற்பனை மட்டும் எட்டி விடுமா? இப்படிப் பல தடை விடைகளுக்குப் பிறகும் நிற்பது ஒரே கருத்து இது தான் : மூலமே இல்லாத முதல்வன்! தன் சங்கற்பத்தால் கொள்ளும் வடிவங்களுக்கு ஒரு கணக்கோ கணிப்போ இல்லை. 'போற்றி எவ்வுயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய்' என்ற மணிவாசகர் (திருவா. திருச்சதகம் 70) கூற்றிலும் இக் கருத்தினை உணரலாம். 'ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமிலானுக்குஆயிரம் திருநாமம் பாடி'க் கொண்டாடுதல் சிற்றுயிர்மாட்டுக் கொண்டகருணையால் பெரியோர் வகுத்த வழி; உருவ வழிபாட்டில் ஒரு நிலைஇது. 41 |