3684.'காண்பார்க்கும் காணப்படு
     பொருட்கும் கண் ஆகி,
பூண்பாய்போல் நிற்றியால்,
     யாது ஒன்றும் பூணாதாய்;
        மாண்பால் உலகை வயிற்று
     ஒளித்து வாங்குதியால்;
ஆண்பாலோ? பெண்பாலோ?
     அப்பாலோ? எப்பாலோ?

    காண்பார்க்கும் - காணுகின்றவர்களுக்கும்; காணப்படு
பொருட்கும் -
காணப்படுகின்ற பொருள்களுக்கும்; கண் ஆகி -
ஆதாரமாகி; யாது ஒன்றும் பூணாதாய் - எந்த ஒரு பொருளையும்
சாராதவனாய் உள்ள நீ; பூண்பாய் போல் நிற்றி - எல்லாப்
பொருளையும் சார்ந்திருப்பவன்போல் நிலைத்திருக்கிறாய்; மாண்பால்
-
(உன்பால் அமைந்த தெய்வீகப்) பெருமிதத்தால்; உலகை வயிற்று
ஒளித்து -
(ஊழிக் காலத்தில்) எல்லா உலகங்களையும் நின்
வயிற்றினுள்ளே மறைத்து வைத்து; வாங்குதி - (பிரளய முடிவிலே
மீண்டும்) வெளிக் கொணர்கிறாய்; ஆண்பாலோ பெண்பாலோ - நீ
ஆணா, பெண்ணா; அப்பாலோ - இருபாலுக்கும் அப்பாற்பட்ட
அலிப் பாலோ; எப்பாலோ - முப்பாலும் அல்லாத வேறு தனி ஒரு
பாலோ; (எவ்வாறு உன்னைப் பகுத்து அறிவது?).

     காண்பார்க்குக் கண்ணாகி காணப்படும் பொருட்கும் கண்
அருள்பவன் ஒளிவடிவினனாகிய கண்ணன். அவன் ஒளிச் சார்பின்றிக்
காண்பாரும் இல்லை, காணப்படுவனவும் இல்லை என்றவாறு.
'காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே காண்பார் ஆர் கண்ணுதல்
நீ காட்டாக்காலே' என்ற திருநாவுக்கரசர் வாக்கு நினைவு கூரத்தக்கது.
'ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்; காணலும்
ஆகான்; உளன் அல்லன் இல்லை அல்லன்; பேணுங்கால் பேணும்
உருவாகும் அல்லனும் ஆம்! கோணை பெரிது உடைத்து எம்
பெருமானைக் கூறுதலே' (நாலாயிர. 2245) என்ற நம்மாழ்வார்
திருவாக்கு இங்குப் பல பாடல்களின் கருத்துக்களைத் தெளிவாக்கும்.   42