3685. | 'ஆதிப் பிரமனும் நீ! ஆதிப் பரமனும் நீ! ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ! "சோதிச் சுடர்ப் பிழம்பு நீ! என்று சொல்லுகின்ற வேதம் முறைசெய்தால், வெள்காரோ வேறு உள்ளார்? |
ஆதிப் பிரமனும் நீ - எல்லாவற்றுக்கும் தொடக்கமாய் உள்ள நான்முகனும் நீயே; ஆதிப் பரமனும் நீ - எல்லாவற்றுக்கும் ஆதியாகிய (நான்முகனுக்கும்) மூலப் பொருளும் நீயே!; ஆதி எனும் பொருளுக்கு - மூலம் என்று சொல்லப்படுவதாகிய பொருளுக்கும்; அப்பால் உண்டாகிலும் நீ - கடந்ததாய் ஏதேனும் ஒன்று இருந்தால் அதுவும் நீயே; 'சோதிச் சுடர்ப் பிழம்பு' நீ என்று - 'பரஞ்சுடராய் ஒளிரும் ஒளித்திரள் நீ என்று; சொல்லுகின்ற வேதம் - உன்னைப் போற்றுகின்ற வேதங்கள்; முறை செய்தால் - முறையிட்டால்; வேறு உள்ளார் - வேதம் கூறும் இவ்விலக்கணத்துள் அடங்காத பிறர் தெய்வங்களெல்லாம்; வெள்காரோ - வெட்கப்பட மாட்டார்களோ? 'முடிச் சோதியாய்! உனது முகச் சோதி மலர்ந்ததுவோ அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ படிச் சோதி ஆடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன் கடிச் சோதி கலந்ததுவோ? திருமாலாய் கட்டுரையே என்ற திருப்பாசுரம் திருமாலின் பல் கோலமும் பல்கலனும் சோதிப்பாங்காய் ஒளிர்வதைக் கூறும். (நாலாயிர. 3121) பரஞ்சோதி! நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதி இன்மையில் படி ஓவி நிகழ்கின்ற பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே என்ற திருப்பாசுரத்துள் (3123) திருமாலே பரஞ்சோதி என்ற கருத்து அமைந்தவை இரண்டும் நம்மாழ்வார் பாடல்களாகும். 'சோதியாய்த் தோன்றும் உருவமே (திருவாசகம், கோயில் திருப்பதிகம் 1) என மணிவாசகரும் இறைவனைச் சோதியாய்க் கண்டு, காட்டுவர். பரம்பொருளைச் சோதி எனக் கொள்வது பல் சமயத்துக்கும் உடன்பாடு. ஞான தீட்சை பெற்ற கவந்தனுக்கு அக்காட்சி வாய்த்தது. 43 |