3686. | 'எண் திசையும் திண் சுவரா, ஏழ் ஏழ் நிலை வகுத்த அண்டப் பெருங் கோயிற்கு எல்லாம் அழகுடைய மண்டலங்கள் மூன்றின்மேல், என்றும் மலராத புண்டரிக மொட்டின் பொகுட்டே புரை; அம்மா! |
எண் திசையும் திண் சுவரா(க) - எட்டுத் திசைகளே வலிமையான சுவர்களாக அமைய; ஏழ் ஏழ் நிலை வகுத்த - பதினான்கு நிலைகள் உடையதாக வகுக்கப்பட்ட; அண்டப் பெருங் கோயிற்கு எல்லாம் - அண்டமாகிய பெரிய கோயில் முழுவதற்கும்; அழகுடைய மண்டலங்கள் மூன்றின் மேல் - சூரிய, சந்திர நட்சத்திரம் என்னும் அழகிய மூன்று மண்டலங்களுக்கு மேலாக; என்றும் மலராத புண்டரிக மொட்டின் பொகுட்டு - எப்பொழுதும் மலராத தாமரை அரும்பின் கொட்டையே; புரை - உனது இருப்பிடமாகும். திருமாலின் இருப்பிடத்தைக் கூறுவது இச் செய்யுள் அண்டமே கோயில்; திசைகளே சுவர், மேல் ஏழும் கீழ் ஏழுமாக அமைந்துள்ள உலகங்களே கோயிலின் அடுக்கு நிலைகள் அக்கோயிலுக்கு ஒளி ஊட்டுவன சூரிய, சந்திர, நட்சத்திர மண்டலங்கள்; அந்த ஒளி மண்டலங்களின் ஒளி பெற்றுத் தான் மலர வேண்டுமென்றில்லாததொரு தாமரை அரும்பு; அந்த அரும்பினுள் உள்ள காணிகை என்னும் (தாமரைக்) காயே பரமபதமாகிய இருப்பிடம். பூவுலகத்துத் தாமரை மலர்வதற்குக் கதிரவன் ஒளி தேவை; ஆயின், பரமபதத் தாமரைக்குக் கதிரவன் முதலாய ஒளி மண்டலங்களின் உதவி தேவைப்படாது ஏழ் ஏழ் (ஏழேழ்) உம்மைத் தொகை (ஏழும் ஏழும்). 44 |