3687. | 'மண்பால்-அமரர் வரம்பு ஆரும் காணாத, எண்பால் உயர்ந்த, எரி ஓங்கும் நல் வேள்வி உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ; இரண்டும் ஒக்கின்ற பண்பு ஆர் அறிவார்? பகராய், பரமேட்டி! |
பரமேட்டி - எல்லாவற்றினும் மேலான நிலையில் உள்ளவனே; மண்பால் அமரர் - பூசுரர் எனப்படும் வேதியர்கள்; வரம்பு ஆரும் காணாத எண்பால் உயர்ந்த - முடிவெல்லையாக அமைந்து எவராலும் காண இயலாத எட்டுத் திசைகளிலும் மேம்பட்ட; எரி ஓங்கும் நல் வேள்வி - ஓமத் தீயில் பெருமையால் உயர்ந்த வேள்வியுணவை (அவியுணவை); உண்பாய் நீ - உண்பவன் நீயே; ஊட்டுவாய் நீ - (அவியுணவை உனக்கு ஊட்டுவோர்க்கும்) ஊட்டுகின்றவனும் நீயே!; இரண்டும் ஒக்கின்ற பண்பு - உண்பவனும் ஊட்டுவோனுமாக இரண்டு நிலைகளும் உன்னிடம் ஒன்றியுள்ள பண்பினை; ஆர் அறிவார் - எவர்தாம் அறிவர்?; பகராய் - சொல். வேதியர்களைப் பூசுரர் (மண்ணுலகத் தேவர்) என்பது ஒரு மரபு. பரமேஷ்டி என்ற வடசொல் பரமேட்டி என நின்றது. எண் பால் - கருத்தளவால் (அளவிட முடியாத) பாங்கு எனலுமாம். உண்பானும் ஊட்டுபவனுமாய் இருக்கின்ற அரு மாயை நிலை நம்மனோரால் அறியும் நிலையதன்று என்பது கருத்து 'நீ அறிதி எப்பொருளும்; அவை உன்னை நிலை அறியா; மாயை இது என்கொலோ? வாராதே வரவல்லாய் (2570), துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி; ஒரு தன்மை சொல்ல அறியாய் - பிறந்தாயும் ஒத்தி; பிறவாயும் ஒத்தி.... ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்' (8259), 'எறிந்தாரும் ஏறுபடுவாரும்....... எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி; பிறியாது நிற்றி.... ஆர் இவ் அதிரேக மாயை அறிவார் (8261) என்ற கவிஞர் வாக்குகளையும் ஒப்பிட்டு உணர்க. 45 |