3688. | 'நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்தெழுந்த மொக்குளே போல, முரண் இற்ற அண்டங்கள், ஒக்க உயர்ந்து, உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற பக்கம் அறிதற்கு, எளிதோ? பரம்பரனே! |
பரம்பரனே - மேலானவற்றுக்கெல்லாம் மேலானவனே; நிற்கும் நெடு நீத்த நீரில் - (பிறவெல்லாம் குலைந்து கிடக்கும் ஊழியிலும்) நிலையாக இருக்கும் பெரு வெள்ளக் கடலில்; முளைத்தெழுந்த மொக்குளே போல - தோன்றிய குமிழ்கள் போல; முரண் இற்ற அண்டங்கள் - (அமைதிக் காலத்தே ஒன்றோடு ஒன்றுக்கு நிலவிய) முரண்பாடுகள் அழியப் பெற்ற அண்டங்கள்; ஒக்க உயர்ந்து - ஒரே நேரத்தில் மேலெழுந்து (படைப்புக் காலத்திலே தோன்றி); உன்னுளே தோன்றி - உன்னிடத்தே தோன்றி; ஒளிக்கின்ற பக்கம் - (ஊழிக்காலத்திலே அதே ஊழி வெள்ளத்திலேயே) ஒளிந்து மறைகின்ற தன்மை; அறிதற்கு எளிதோ - அறிந்து கொள்ளுதற்கு எளிதோ? (அறியமுடியாதது). பரம் - மேலானது; பரன் - மேலானவன்; பரம்பரன் - மேலானவற்றுளெல்லாம் மேலானவன்; நிகர் இல்லான். ஊழி முடிவில் பரமன் சங்கற்பத்தால் உருவாகும் அண்டங்கள் இறுதியூழியில் அவ்வெள்ளத்தினுள்ளே ஒடுங்குகின்றன என்பது சாத்திரக் கொள்கை. ஊழிக் காலப் பெருக்காம் கடலை மகார்ணவம் என்று வடமொழி நூல்கள் குறிக்கின்றன என்பர். ஊழிக் கடலில் தோன்றி, மீண்டும் அக்கடலில் தானே ஒடுங்குவதென்பது பரமனில் தோன்றிப் பரமனிலேயே ஒடுங்குவதைக் குறித்ததாம். இக் கருத்தினை அழகிய மணவாள தாசர் ஓர் உவமை கொண்டு விளக்குவார்; அச் செய்யுள் : 'சின்னூல் பலபல வாயால் இழைத்துச் சிலம்பி மின்னும் அந்நூல் அருந்திவிடுவது போல அரங்கர் அண்டம் பல்நூறு கோடி படைத்து அவை யாவும் பழம்படியே மன் ஊழி தன்னில் விழுங்குவர் போத மனம் மகிழ்ந்தே (திருவரங்கத்து மாலை 12) 46 |