3689.'நின் செய்கை கண்டு நினைந்தனவோ,
     நீள் மறைகள்?
உன் செய்கை அன்னவைதான்
     சொன்ன ஒழுக்கினவோ?
என் செய்தேன் முன்னம்?
     மறம் செய்கை எய்தினார்-
பின் செல்வது இல்லாப் பெருஞ்
     செல்வம் நீ தந்தாய்!

     நீள் மறைகள் - பெரு வேதங்கள்; நின் செய்கை கண்டு
நினைந்தனவோ -
உன் செய்கைகளை உணர்ந்த அனுபவத்தால்
நினைந்து செய்யப்பட்டனவோ; (அன்றி); உன் செய்கை தான் - உன்
செய்கைகள் தான்; அன்னவை சொன்ன ஒழுக்கினவோ -
அவ்வேதங்கள் சொன்ன முறையிலே அமைந்தனவோ?; மறம்
செய்கை எய்தினார் பின் செல்வது இல்லாப் பெருஞ்செல்வம் -
அறநெறிப் படாத தீவினைகளைச் செய்வோரின் பின்னாலே செல்லாத
பெரிய செல்வத்தை; நீ தந்தாய் - எனக்கு நீ தந்தருளினாய்;
முன்னம் என் செய்தேன் - இத்தகைய அருள் நலத்தை அடியேன்
இப்பிறவியில் பெறுவதற்கு முன்னைப் பிறவிகளிலே என்ன நல்வினை
செய்தேனோ?

     வேதங்கள் உன் செய்கைகளை உணர்ந்ததன் விளைவா, அன்றி
உன் செயல்கள் வேதங்களின் சொல் வழியை விளக்குவனவா என்ற
பிணைவினாக்கள் தேவ நெறியும் இறைநிலையும் வெவ்வேறு அல்ல
என்பதை உணர்த்தின.

     முற்பிறப்புகளில் நல்வினை செய்திருந்தாலன்றி இந்தப் பேறு
இப்போது வாய்த்திராது என்பது குறிப்பு. 'என்ன புண்ணியம்
செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து முன்னம் நீ புரி
நல்வினைப் பயனிடை முழு மணித்தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு
வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே........' என்ற திருஞானசம்பந்தர் வாக்கிலே இக்
கருத்து அமைதல் கருதத்தக்கது.                            47