கவந்தனை இராமன் காணுதல்

3691. என்று, ஆங்கு, இனிது இயம்பி,
     'இன்று அறியக் கூறுவெனேல்,
ஒன்றாது, தேவர் உறுதிக்கு'
     என உன்னா,
தன் தாயைக் கண்ணுற்ற கன்று அனைய
     தன்மையன் ஆய்,
நின்றானைக் கண்டான்,-நெறி நின்றார்
     நேர் நின்றான்.

    என்று ஆங்கு இனிது இயம்பி - மேற்கூறியவாறு இராமனைப்
பரம்பொருளென இனிது போற்றிச் சொல்லி; 'இன்று அறியக்
கூறுவெனேல் -
இதற்குமேல் விவரங்களை வெளிப்படையாக நான்
கூறினால்; தேவர் உறுதிக்கு ஒன்றாது' - தேவர்களுக்குத் திருமால்
கொடுத்த உறுதிமொழிக்குப் பொருந்தாது; என உன்னா - என்று
நினைத்து (அதற்கு மேற்பட வரவுள்ளன எதுவும் கூறாமல்); தன்
தாயைக் கண்ணுற்ற கன்று அனைய தன்மையனாய் -
தாய்ப்
பசுவைக் கண்ட கன்று போன்ற இயல்புடையவனாய்; நின்றானை -
விண்ணிடத்தே தெய்வ உருக் கொண்டு நின்ற கவந்தனை; நெறி
நின்றார் நேர் நின்றான் -
அறம் மற்றும் பக்தி நெறியில்
நின்றவர்க்கு முன் தரிசனம் தந்து நிற்பவனாகிய இராமபிரான்;
கண்டான்......;-

     சாப விடுதலை பெற்ற மகிழ்ச்சியிலும் பக்திக் கனிவாலும்
இராமனாகிய பரம் பொருளைக் கவந்தன் இனையன கூறி வழுத்தினன்.
அப்பரம்பொருளே அரக்கர் அழிவின் பொருட்டு இராமனாக
அவதரித்திருப்பது, மற்றும் வரவிருக்கும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைச்
சொன்னால் தெய்வ ரகசியத்தை வெளிப்படுத்தியவன் ஆவான். இந்த
நினைப்பு எழுந்ததால் 'இன்று அறியக் கூறுவனேல் தேவர் உறுதிக்கு
ஒன்றாது' என நினைந்தான். சாபத்தால் கவந்தமாக இருந்தவனுக்கு
முதலில் இராமனின் தெய்வப் பெற்றிமை தெரியவில்லை; ஆளும்
நாயகன் அம் கையின் தீண்டிய அதனால்' (3680) ஞான தீட்சை
பெற்றவனாய்த் தெய்வ உருவினை அடைந்தான். தேவ வடிவினனாக
மலர்ந்த கவந்தனுக்கு இராமாவதாரப் பின்னணி தெளிவாயிற்று
என்பதை உணர்தல் வேண்டும். 'கன்று' எனப் பின் சுட்டியது கொண்டு
'தாய்' என்பதற்குத் தாய்ப் பசு எனப் பொருள் கூறப்பட்டது. உன்னா -
செய்யா எனும் வாய்பாட்டில் வந்த (உன்னி) உடன்பாட்டு
வினையெச்சம். நின்றான், நின்றார் - வினையாலணையும் பெயர்கள்.    49