இலக்குவன் வினவுதல்

3692.'பாராய், இளையவனே! பட்ட
     இவன், வேறே ஓர்
பேராளன்தானாய், ஒளி
     ஓங்கும் பெற்றியனாய்,
நேர், ஆகாயத்தின்மிசை நிற்கின்றான்;
     நீ இவனை
ஆராய்! என, அவனும், 'ஆர்கொலோ
     நீ? என்றான்.

    'இளையவனே - தம்பீ; பாராய் - மேலே நிற்பவனைப் பார்;
பட்ட இவன் - இறந்து போன இவன்; வேறே ஓர் பேராளன்
தானாய் -
மற்றொரு வடிவம் கொண்டு பெருமையை ஆள்பவனாயும்;
ஒளி ஓங்கும் பெற்றியனாய் - ஒளி பெருகும் தன்மை
உடையவனாயும்; நேர் - நேராக நம் முன்னே; ஆகாயத்தின்மிசை
நிற்கின்றான் -
விண் மீது நிற்கின்றான்; நீ இவனை ஆராய் -இவனைப்
பற்றிய விவரங்களை நீ ஆராய்ந்து அறிவாயாக; என -என்று இராமன்
சொல்ல; அவனும் - இளவலாகிய இலக்குவனும்;'ஆர்கொலோ நீ - நீ
யார்; என்றான் - என்று கவந்தனைவினவினான்.                 50