அறுசீர் ஆசிரியவிருத்தம்

3693.'சந்தப் பூண் அலங்கல் வீர! தனு
     எனும் நாமத்தேன்; ஓர்
கந்தர்ப்பன்; சாபத்தால், இக்
     கடைப்படு பிறவி கண்டேன்;
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட,
     முன்னுடை வடிவம் பெற்றேன்;
எந்தைக்கும் எந்தை நீர்; யான்
     இசைப்பது கேண்மின்' என்றான்.

    'சந்தப் பூண் அலங்கல் வீர! - அழகிய அணிகளும்
மாலையும் அணிந்துள்ள வீரனே; தனு எனும் நாமத்தேன் - நான்
தனு என்ற பெயருடையவன்; ஓர் கந்தர்ப்பன் - நான் ஒரு
கந்தருவன்; சாபத்தால் - ஒரு முனிவர் இட்ட சாபத்தால்; கடைப்படு
இப் பிறவி கண்டேன் -
கீழானதாகிய இந்தக் கவந்தப் பிறப்பை
அடைந்தேன்; வந்துற்றீர் மலர்க்கை தீண்ட - இங்கு வந்து
சேர்ந்தவர்களாகிய உங்கள் மலர் போன்ற கைகள் தீண்டியமையால்;
முன்னுடை வடிவம் பெற்றேன் - எனக்கு உரியதாகிய பழைய
வடிவத்தைப் பெற்றேன்; எந்தைக்கும் எந்தை நீர் - என்
தந்தைக்கும் தந்தையர் போன்றவர்கள் நீங்கள்; யான் இசைப்பது
கேண்மின்' -
நான் சொல்லுவதைக் கேளுங்கள்; என்றான் - என்று
மறு வடிவம் கொண்ட கவந்தன் கூறினான்.

     தனு என்பது கவந்தனின் முற்பெயர். விசுவாவசு என்று
கூறுவதும் உண்டு.                                            51