3695.'பழிப்பு அறு நிலைமை ஆண்மை
     பகர்வது என்? பதும பீடத்து
உழைப் பெருந் தகைமை சான்ற
     அந்தணன் உயிர்த்த எல்லாம்
அழிப்பதற்கு ஒருவன் ஆன
     அண்ணலும், அறிதிர் அன்றே,
ஒழிப்ப அருந் திறல் பல்
     பூத கணத்தொடும் உறையும் உண்மை?

    'பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என் - பழித்துக்
கூற முடியாத நிலையில் உள்ள உங்களது ஆண்மை பற்றி
விரித்துரைத்தல் வேண்டுமா என்ன (வேண்டியதில்லை);
பதுமபீடத்துழை - தாமரையாகிய பீடத்தில் (எழுந்தருளியுள்ள);
பெருந் தகைமை சான்ற அந்தணன் - பெருமை மிக்க
வேதியனாகிய நான்முகன்; உயிர்த்த எல்லாம் - படைத்தவற்றை
யெல்லாம்; அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் -
அழிப்பதற்கென்றே ஒப்பற்றவனாய் உள்ள சிவபிரான்கூட; ஒழிப்ப
அருந் திறல் -
அழிப்பதற்கரிய ஆற்றல் கொண்ட; பல் பூத
கணத்தொடும் -
பல பூதங்களின் கூட்டத்துடன்; உறையும் உண்மை
அறிதிர் அன்றே -
சேர்ந்திருக்கும் உண்மையை நீங்கள்
அறிந்திருக்கிறீர்கள் அன்றோ.

     அண்ணலும் - உயர்வு சிறப்பும்மை. அழிப்பதற்கென்றே தனிப்
பெருந்திறனாளனாகிய சிவபிரானே பூதகணங்களின் உதவியைப்
பெற்றிருக்கிறான் என்பதை எடுத்துக் காட்டி, இராமலக்குவர்கள்
துணை வலி நாட வேண்டும் என்பதைக் கவந்தன் வற்புறுத்துகிறான்.     53