3696.'ஆயது செய்கை என்பது, அறத்துறை
     நெறியின் எண்ணி
தீயவர்ச் சேர்க்கிலாது, செவ்வியோர்ச்
     சேர்த்து, செய்தல்;
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத்
     தலைப்பட்டு, அன்னாள்
ஏயது ஓர் நெறியின் எய்தி,
     இரலையின் குன்றம் ஏறி,

    'அறத்துறை நெறியின் எண்ணி - அறநெறி இது என
முறைப்படி எண்ணி; தீயவர்ச் சேர்க்கிலாது - (துணை சேர்த்துக்
கொள்ள வேண்டுமே என்பதற்காகத்) தீயவர்களைச் சேர்த்துக்
கொள்ளாமல்; செவ்வியோர்ச் சேர்த்து - செம்மையானவர்களையே
துணைவராகச் சேர்த்துக்கொண்டு; செய்தல் - செயல்படுவதே; ஆயது
செய்கை என்பது -
(நான் சொன்னவாறு) துணை சேர்த்துச்
செய்வதாகும்; (அதன்பொருட்டு); உயிர்க்குத் தாயினும் நல்கும் -
உயிர்களுக்குத் தாயைவிட அன்பொடு உதவுகின்ற; சவரியைத்
தலைப்பட்டு -
சவரியைச் சந்தித்து; அன்னாள் ஏயது ஓர் நெறியின்
எய்தி -
அவள் ஏவுமாறு ஒரு வழியிலே போய்; இரலையின் குன்றம்
ஏறி... இருசிய முக மலை மீது ஏறி... -
(குளகச் செய்யுள்; பின்வரும்
செய்யுளைக் கொண்டு முடியும்).

     ஆயது - முன் செய்யுளில் குறித்த கருத்தைக் குறிப்பது;
அஃதாவது, துணை நாடிச் செயல்பட வேண்டும் என்பது. துணை
நாடிச் செய்ய வேண்டும் என்று கூறிய கவந்தன் எத்தகைய துணை
நாடுவது என்று இச் செய்யுளாலும் அடுத்த செய்யுளாலும்
தெளிவுறுத்துகின்றான். செய்தல் - தொழிற்பெயர்.                   54