3697.'கதிரவன் சிறுவன் ஆன கனக
     வாள் நிறத்தினானை
எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து,
     அவனின், ஈண்ட,
வெதிர் பொரும் தோளினாளை நாடுதல்
     விழுமிது' என்றான்.
அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே
     அமைவது ஆனார்.

    'கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை - சூரிய
தேவனின் மகனும் பொன்போல ஒளிகொண்ட நிறம் உடையவனும்
ஆகிய சுக்கிரீவனை; எதிர் எதிர் தழுவி - ஒருவருக்கொருவர் எதிர்
கொண்டு தழுவி; நட்பின் இனிது அமர்ந்து - நட்பிலே இனிது
பொருந்தி; அவனின் - அவன் உதவியால்; ஈண்ட - விரைவாக;
வெதிர் பொரும் தோளினாளை - மூங்கிலை ஒத்த தோள் கொண்ட
சீதையை; நாடுதல் விழுமிது - தேடுவது சிறந்தது; என்றான் - என்று
கவந்தன் கூறினான்; அதிர்கழல் வீரர் தாமும் - ஒலிக்கும் வீரக்கழல்
அணிந்த இராமலக்குவர்களாகிய வீரர்களும்; அன்னதே அமைவது
ஆனார் -
அவன் சொன்னதையே உடன்பட்டார்கள்.

     சுக்கிரீவன் கதிரவன் மைந்தன்; பொன்னிற மேனி உடையவன்.
நிறத்தினான் என்ற சொல்லுக்கு உடல் உடையவன் என்றும் பொருள்
கொள்ளலாம். அதிர் கழல் - வினைத்தொகை.              55