3698. | ஆன பின், தொழுது வாழ்த்தி, அந்தரத்து அவனும் போனான் மானவக் குமரர்தாமும் அத் திசை வழிக் கொண்டு ஏகி கானமும் மலையும் நீங்கி, கங்குல் வந்து இறுக்கும் காலை, யானையின் இருக்கை அன்ன, மதங்கனது இருக்கை சேர்ந்தார். |
ஆனபின் - அதன்பின்; அவனும் - கவந்தன்; தொழுது வாழ்த்தி - இராம இலக்குவரைத் தொழுது வாழ்த்தி; அந்தரத்துப் போனான் - விண் வழியே போனான்; மானவக் குமரர்தாமும் - மனு மரபில் தோன்றியவர்களாகிய இராமலக்குவரும்; அத் திசை வழிக்கொண்டு ஏகி - கவந்தன் குறித்த இரலை மலை இருந்த திசை நோக்கிய வழியிலே சென்று; கானமும் மலையும் நீங்கி - காடும் மலையும் கடந்து; கங்குல் வந்து இறுக்கும் காலை - இரவு நேரம் வந்து சேர்ந்தபோது; யானையின் இருக்கை அன்ன - யானைகள் இருக்கும் இடம் போன்ற; மதங்கனது இருக்கை சேர்ந்தார் - மதங்க முனிவரது ஆச்சிரமத்தை அடைந்தார்கள். மனு மரபில் வந்தவர் மானவர்; வட மொழித் தத்திதாந்த நாமம். மானம் என்பது தமிழில் உயர்வைக் குறிக்கும்; உயர்வுடைய குமரர்என்ற பொருளில் மானவக்குமரர் என்றார் எனலுமாம். இருக்கை - இருக்கும் இடத்தைக் குறிக்கும் தொழிலாகுபெயர். மதங்க முனிவர் யானைகளிடத்துப் பரிவு கொண்டவராய் அவற்றைப் பேணியவர். ஆதலின், அவருடைய ஆச்சிரமச் சூழலில் யானைகள் மிகுதியாக வாழ்ந்தன என்பர். எனவே, யானைகளின் இருப்பிடந்தானோ என்று எண்ணும் வகையில் அவர் தம் ஆச்சிரமம் அமைந்திருந்தது. 56 |