சவரியின் விருந்தினனான இராமன்

3700. அன்னது ஆம் இருக்கை நண்ணி,
     ஆண்டுநின்று, அளவு இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத்
     தலைப்பட்டு, அன்னாட்கு
இன்னுரை அருளி, 'தீது இன்று
     இருந்தனைபோலும்' என்றான் -
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது
     ஓர் மூலம் இல்லான்.

    'இவற்கு முன் இது' என்று எண்ணல் ஆவது ஓர் மூலம்
இல்லான் -
'இவனுக்கு முன்னமே இப்பொருள் உள்ளது' என்று
எண்ணக்கூடிய பிறிதொரு முதற்பொருள் இல்லாதவனாகிய
இராமபிரான்; அன்னது ஆம் இருக்கை நண்ணி - மேலே
விளக்கப்பட்ட அத்தன்மையுடைய மதங்காசிரமத்தை அடைந்து;
ஆண்டு நின்று - அவ்வாசிரமத்திலேயே நெடுங்காலம்
நிலைத்திருந்து; அளவு இல் காலம் தன்னையே நினைந்து
நோற்கும் சவரியைத் தலைப்பட்டு -
அளவில்லாத நெடுங்காலமாக
(இராமனாகிய) தன்னையே நினைத்துத் தவம் செய்து கொண்டிருந்த
சவரியைச் சந்தித்து; அன்னாட்கு இன்னுரை அருளி -
அத்தவமகளுக்கு இனிய சொற்களைத் திருவாய் மலர்ந்தருளி; தீது
இன்று இருந்தனை போலும்' என்றான் -
'இவ்வளவு காலமும்
துன்பம் ஏதுமின்றி இருந்தனையா' என்று கேட்டருளினான்.

     'மூலம் இல்லான் நண்ணி, தலைப்பட்டு, இன்னுரை அருளி
என்றான்' எனக் கூட்டிப் பொருள் கொள்க. ஆதிமூலம் (காரணம்)
ஆகிய பெருமானுக்கு முன்னதாகக் கூடிய வேறு ஒரு மூலம்
இல்லையாதலின் 'முன் இவற்கு இது என்று எண்ணலாவதோர் மூலம்
இல்லான்' என்றார். முதல் முன்னவன் (2561) 'தனிமூலத்து அரும்பரமே
(2564) நீ ஆதி முதல் தாதை (2568) தன்னலாது ஒரு பொருள் தனக்கு
மேல் இலான் (3626) என்று இக் காண்டத்துள் வந்துள்ள பிற
தொடர்கள் நினைவு கூரத்தக்கன.

     ஆண்டு (அங்கேயே) நின்று (நிலைத்திருந்து) என்ற தொடர்
மேல் வரும் 3702 ஆம் பாடற் செய்தியை உட்கொண்டது. காலம்
என்ற தத்துவம் தன்னளவில் எல்லையற்றது; 'இராமபிரான் எப்பொழுது
வருவான், எப்பொழுது வருவான்' என்று இராமபிரானையன்றி வேறு
நினைவு சவரிக்கு இல்லை என்பதைத் 'தன்னையே' என்பதிலுள்ள
ஏகாரம் புலப்படுத்திற்று. விருந்தினராக வருவோருக்கு
விருந்தோம்புவார் இன்சொல் வழங்குதல் மரபு; இங்கே இராமன்,
விருந்தோம்பும் சவரிக்கு இன்னுரை அருளியதாகக் கம்பர்
குறிப்பிடுகிறார். 'வாராதே வரவல்லான்' (2570); ஆதலின், அவன்
விருந்தினன் அல்லன்; அருள்பாலிக்க வந்தவன் பரம்பொருள் ஒன்றே
நாட்டமாய், மீளா ஆளாய், கொய்ம்மலர்ச் சேவடி இணையே
கூடியிருப்போர்க்கு எந்நாளும் இன்பமே, துன்பம் இல்லை என்ற
கருத்து முன் பாடலில் வந்தது; அதனை 'தீது இன்று இருந்தனை
போலும்' என்ற வினா இப்பாடலில் குறித்தது. ஒப்பில் போலியாகிய
'போலும் இங்கே வினாப் பொருளில் வந்தது.

     'இன்றி' என்ற வினையெச்சம் 'இன்று என வந்தது; எச்சத்திரிபு.
(விகாரமேயாயினும் இதனை இயல்பெனக் கொள்ளும் இலக்கணம்).       2