3701.ஆண்டு, அவள் அன்பின்
     ஏத்தி, அழுது இழி அருவிக்கண்ணள்,
'மாண்டது என் மாயப் பாசம்;
     வந்தது, வரம்பு இல் காலம்
பூண்ட மா தவத்தின் செல்வம்;
     போயது பிறவி' என்பாள்
வேண்டிய கொணர்ந்து நல்க,
     விருந்துசெய்து இருந்த வேலை,

    ஆண்டு - அவ்வேளையில்; அவள் அன்பின் ஏத்தி - சவரி
இராமபிரானை அன்பினால் புகழ்ந்து; அழுது இழி அருவிக்
கண்ணள் -
(பக்திக் கனிவினால்) அழுது, வழிகின்ற அருவிபோன்ற
கண்ணீர் உடையவளாய்; என் மாயப் பாசம் மாண்டது - பொய்யான
என் உலகப் பற்று அழிந்தது; வரம்பு இல் காலம் பூண்ட மா
தவத்தின் செல்வம் வந்தது -
அளவற்ற காலம் மேற்கொண்டிருந்த
பெருந் தவத்தின் பயன் என்னை வந்தடைந்தது; பிறவி போயது -
இனிமேல் பிறப்பு ஒழிந்தது; என்பாள் - என்று சொல்லி; வேண்டிய
கொணர்ந்து நல்க -
ஏராளமாகக் கனி முதலியவற்றைக் கொண்டு வந்து
தர; விருந்து செய்து இருந்த வேலை - அவள் அளித்த விருந்தினை
ஏற்று இராமலக்குவர் இருந்த நேரத்தில்.

     இது குளகச் செய்யுள்; மேல் 3703 ஆம் செய்யுளில் 'என்ன' என
வரும் எச்சம் கொண்டு முடியும்.

     காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குதல் பக்தியின் இயல்பான
மெய்ப்பாடு. இங்கே பக்தியுணர்வுமட்டுமன்றி, பரம்பொருளாய
இராமனைப் புறக்கண்ணாலும் காணப்பெற்ற மகிழ்ச்சியும் கண்ணீர்
அருவிக்குக் காரணமாயிற்று. மாண்டது, வந்தது, போயது என்ற இறந்த
கால வினைமுற்றுகள் தெளிவு பற்றி வந்த கால வழுவமைதி. உலகப்
பற்று என்பது ஒரு பொய்த்தோற்றத்தால் ஏற்படுவது என்பதால் 'மாயப்
பாசம் என்றார். முன்னையோர் சேகரித்து விட்டுச் செல்வது செல்வம்
ஆகாது; தம் முயற்சியால் சேர்ப்பதே செல்வம், பயன் தான் செய்த
தவத்தின் முடிவான பயனைச் செல்வம் என்றாள் சவரி. அச் செல்வப்
பயன் பிறவாமைப் பேறாகும். வேண்டிப் பெறாமல் தவத்தின்
வாகையாய்ப் பெற்றாள் என்பது சிறப்பு. 'என் மாயப் பாசம் மாண்டது'
என்பது இயல்பான சொற் கிடக்கை; இங்கு மாறி, பயனிலையை
முன்னிறுத்தி 'மாண்டது என் மாயப் பாசம்' என நின்றது; வெற்றி
எக்களிப்பின் புறப்பாடு இது. அப்படியே, வந்தது..... செல்வம்,’
’போயது’ என்ற தொடர்களும் உணரத்தக்கன. 'வேண்டிய' என்பதற்கு
விரும்பிய என்று கொள்வதினும் மிகுதிப் பொருள் கொள்ளுதல் சிறப்பு.   3