சவரி சொன்ன செய்தி

3702.'ஈசனும், கமலத்தோனும், இமையவர்
     யாரும், எந்தை!
வாசவன் தானும், ஈண்டு வந்தனர்
     மகிழ்ந்து நோக்கி,
"ஆசு அறு தவத்திற்கு எல்லை
     அணுகியது; இராமற்கு ஆய
பூசனை விரும்பி, எம்பால்
    போதுதி" என்று, போனார்.

    எந்தை - எம் தந்தையே; ஈசனும் - சிவபெருமானும்;
கமலத்தோனும் - தாமரை மலரில் உள்ள நான்முகனும்; இமையவர்
யாரும் -
தேவர்கள் எல்லாரும்; வாசவன்தானும் - அந்தத்
தேவர்களின் தலைவனான இந்திரனும்; ஈண்டு வந்தனர் மகிழ்ந்து
நோக்கி -
இங்கே வந்து மகிழ்ந்து என்னைப் பார்த்து; ஆசு அறு
தவத்திற்கு எல்லை அணுகியது -
குற்றமற்ற உன் தவத்தின்
முடிவான பயன் வந்துறும் காலம் நெருங்கிவிட்டது; இராமற்கு ஆய
பூசனை விரும்பி -
இங்கு வரவிருக்கும் இராமபிரானுக்குச் செய்ய
வேண்டிய பூசையை விரும்பிச் செய்து முடித்து; எம்பால் போதுதி -
அதன் பின் எம்மிடம் வந்து சேர்வாயாக; என்று போனார் - என்று
சொல்லிப் போயினார்கள்.

     தேடிப் போய் அடையப்பட வேண்டிய சிவன் முதலாயினோர்
ஒற்றைக் குறிக்கோளில் உறைத்து நின்ற சவரியைத் தேடி வந்தனர்;
இது இராமனையே நினைந்து நோற்ற தவத்தின் மேன்மை.            4