3703.இருந்தனென், எந்தை! நீ ஈண்டு
     எய்துதி என்னும் தன்மை
பொருந்திட; இன்றுதான் என்
     புண்ணியம் பூத்தது' என்ன,
அருந் தவத்து அரசிதன்னை
     அன்புற நோக்கி, 'எங்கள்
வருந்துறு துயரம் தீர்த்தாய்;
     அம்மனை! வாழி' என்றார்.

    எந்தை - எம் தந்தையே; நீ ஈண்டு எய்துதி என்னும்
தன்மை பொருந்திட -
நீ இங்கே வருவாய் என்ற செய்தி
தெரிந்தமையால்; இருந்தனென் - (உன்னை எதிர்பார்த்து) இங்கே
இதுவரை இருந்தேன்; இன்று தான் என் புண்ணியம் பூத்தது - உன்
வருகையால் இன்று தான் என் தவம் மலர்ச்சி பெற்றது; என்ன -
என்று சவரி சொல்ல - (அதைக் கேட்ட இராமலக்குவர்);
அருந்தவத்து அரசி தன்னை அன்புற நோக்கி - செயற்கு அரிய
தவத்துறை அரசியை அன்பு பெருகப் பார்த்து; அம்மனை - தாயே;
வருந்துறு எங்கள் துயரம் தீர்த்தாய் - வழிநடையால் வேதனையுற்ற
எங்கள் துன்பத்தைப் போக்கினாய்; வாழி - வாழ்வாயாக; என்றார் -
என்று கூறினார்.

     திருநாவுக்கரசரை ஞானசம்பந்தர் முதலில் சந்தித்தபோது
'அப்பரே' (பெ. பு. - திருநாவுக்கரசர் 234) என்று அழைத்ததையும்,
காரைக்காலம்மையாரைச் சிவபிரான் 'அம்மையே' (பெ.பு.-காண்க. 59)
என்று அழைத்ததையும் ஒப்பிட்டுக் காணலாம். வாழிய என்னும்
வியங்கோள் வினைமுற்று 'வாழி என விகாரமாயிற்று.                 5