இரலை மலைக்கு வழி கூறுதல்

3704. அனகனும் இளைய கோவும் அன்று
     அவண் உறைந்தபின்றை,
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின்
     நோக்கி, வெய்ய
துனை பரித் தேரோன் மைந்தன் இருந்த
     அத் துளக்கு இல் குன்றம்
நினைவு அரிது ஆயற்கு ஒத்த
     நெறி எலாம் நினைந்து சொன்னாள்.

    அனகனும் இளைய கோவும் - குற்றம் இலாதவனாகிய இராமபிரானும்
இளவலாகிய இலக்குவனும்; அன்று அவண் உறைந்த பின்றை -
அன்றைக்கு அந்த மதங்காசிரமத்திலே தங்கியிருந்தபின்; வினை அறு
நோன்பினாளும் -
இருவினைப் பயனும் நீங்குதற்கு ஏற்ற தவநிலை
பெற்றவளாகிய சவரி; மெய்ம்மையின் நோக்கி - (இராமலக்குவரை)
மெய்யான அன்போடு பார்த்து; வெய்ய துனை பரித்தேரோன் - வெப்பம்
கொண்டதும் விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பெற்றதுமாகிய தேரினைச்
செலுத்துவோனாகிய கதிரவனின்; மைந்தன் - மகனாகிய சுக்கிரீவன்;
இருந்த - வாழ்ந்து வந்த; அத் துளக்கு இல் குன்றம் - அழிதல்
இல்லாத அந்த ருசியமுகம் என்னும் மலையை (அடைதற்குரிய);
நினைவு அரிது ஆயற்கு ஒத்த - நினைப்பதற்கு அரியதும்
ஆராய்ந்து தெளிந்தால் மட்டுமே தெரியக் கூடியதும் ஆகிய; நெறி
எலாம் -
வழி முழுவதையும்; நினைந்து சொன்னாள் - எண்ணிப்
பார்த்துச் சொன்னாள்.

     அனகன் : குற்றம் இல்லாதவன் நோன்பு : தவம் தவத்தின்
பயன் இருவினைப் பிணி நீங்குதல்;  சவரி அந்த நிலை அடைந்தவள்
என்பதை 'வினை அறு நோன்பினாள்' என்ற தொடர் குறித்தது. இனி
இரலை மலைக்குப் போகும் வழியைத் தெரிவதே இராமலக்குவர்களின்
அவதாரப் பயணத்துக்கு உண்மைப் பயனாகும்; ஆதலின்
'தெமெய்ம்மையின் நோக்கி' என்றார். இதுவரை நோக்கியது தன் நிலை
குறித்தது; இது அவர்கள் அவதாரப் பயணம் குறித்தது. அவ்வழி
நினைவிற்கும் கொடுமையானது; மேலும், ஆராய்ந்து தெளிந்தே
செல்லுதற்கு உரியது; எனவே, நினைவு அரியது என்றும் ஆயற்கு
ஒத்தது என்றும் கூறினார்.

     அறு நோன்பு, துணை பரி வினைத் தொகைகள். துளக்கு -
முதனிலைத் தொழிற்பெயர்.                                     6