சவரி முடிவும் மேற்பயணமும்

3706.பின், அவள் உழந்து பெற்ற
     யோகத்தின் பெற்றியாலே
தன் உடல் துறந்து, தான் அத்
     தனிமையின் இனிது சார்ந்தாள்;
அன்னது கண்ட வீரர் அதிசயம்
     அளவின்று எய்தி,
பொன் அடிக் கழல்கள் ஆர்ப்ப,
     புகன்ற மா நெறியில் போனார்.

    பின் - சவரி வழி சொல்ல இருவரும் கேட்ட பிறகு; அவள் -
அச்சவரி; உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே - அரிய
முயற்சியால் வருந்திப் பெற்ற யோக நெறியின் சிறப்பாலே; தன் உடல்
துறந்து -
தன் உடம்பை விடுத்து; தான் அத் தனிமையின் இனிது
சார்ந்தாள் -
அவள் அந்தத் தனிப்பெரு நிலையினை இனிதே சென்று
சேர்ந்தாள்; அன்னது கண்ட வீரர் - அதனை நேரிலே கண்ட
வீரர்களாகிய இராமனும் இலக்குவனும்; அதிசயம் அளவின்று எய்தி-
அளவின்றி அதிசயம் அடைந்து; பொன் அடிக்கழல்கள் ஆர்ப்ப-
அழகிய கால்களில் கட்டிய கழல்கள் ஒலிக்கும்படியாக; புகன்ற மா
நெறியில் போனார் -
சவரி சொல்லிய பெருமைக்குரிய வழியிலே
போனார்கள்.

     யோக நெறி உணர்தலும் அதனைப் பின்பற்றலும் அருமை;
அதனைப் பெரிதும் பாடுபட்டு அறிந்தவள் சவரி. அந்நெறியில் முற்றுற
வெற்றி பெற்ற அவள் யோகக் கனலை எழுப்பி அவ்வழி வீடு
எய்தினாள். அதனைக் கண்டு வியந்தனர். இராமலக்குவர். பின்னர்
அச் சவரி சொன்ன வழியைப் பற்றி இரலை மலை நோக்கிப் பயணம்
சென்றனர் - இது பாடற் செய்தி.

     காயத்தைப் பொசுக்காமல் உதறிச் சென்றது யோகத்தவம். பல்
துறைத் தவமுனிவர்களைக் கண்டறிந்த இராமலக்குவர்க்குச் சவரியின்
யோக முத்தி புதிய காட்சி. புதுமை பற்றிய வியப்பினைக் கம்பர்
'அதிசயம்' என்றார். வாழ்விலே வியப்புக்கு உரிய வெற்றிக்
காட்சியைக் காணும் பேறு பெற்றனர் என்பதை வீரக் கழல்
ஒலிப்பதாகச் சொல்லி விளக்குகிறார். கவிச்சக்கரவர்த்தி. பிராட்டியைக்
காணுதற்கு உதவியாகச் சுக்கிரீவனின் துணை கிடைக்கப் போவதால்
மனத்துள் எழுந்த வெற்றியுணர்வுக்குக் கழல்களின் துணை கிடைக்கப்
போவதால் மனத்துள் எழுந்த வெற்றியுணர்வுக்குக் கழல்களின் ஆர்ப்பு
ஒரு குறியீடு என்றும் கொள்ளலாம். பிராட்டி மீட்புக்கான வழி
புலப்படுதல் குறித்து அதனை 'மாநெறி' எனச் சிறப்பித்தார்.

     இன்றி (அளவின்றி) என்ற வினையெச்சம் இன்று என நின்றது;
'அன்றி இன்றி என் வினை எஞ்சு இகரம் தொடர்பினுள் உகரமாய்
வரின் இயல்பே' என்ற விதி நினைவிற் கொள்ளத்தக்கது.             8