3372. | திறம் தெரி வஞ்சன், அச் சொல் செப்பலும், செப்பம் மிக்காள், 'அறம் தரு வள்ளல், ஈண்டு இங்கு அருந் தவம் முயலும் நாளுள், மறம்தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும் இறந்தனர் முடிவர்; பின்னர், இடர் இலை உலகம்' என்றாள். |
திறம் தெரிவஞ்சன் - (சீதை) மனநிலையை அறியும் வஞ்சகனாம் இராவணன்; அச்சொல் செப்பலும் - அவ் வார்த்தையைக் கூறியதும்; செப்பம் மிக்காள் - மேன்மை நிரம்பிய சீதை; அறம் தரு வள்ளல் - தருமத்தை உலகுக்குத் தந்து நிலைநாட்டும் வள்ளலாம் இராமன்; ஈண்டு இங்கு அருந்தவம் முயலும் நாளுள் - இப்போது இவ்வனத்தில் செயற்கரிய தவத்தைச் செய்யும் இந்நாட்களுள்; மறம் தலைதிரிந்த வாழ்க்கை அரக்கர் - பாலை வழிகளில் சஞ்சரிக்கும் வாழ்வையுடைய இராக்கதர்கள்; தம் வருக்கத் தோடும் இறந்தனர் முடிவர் - தங்கள் இனத்தோடு இறந்து ஒழிவர்; பின்னர் உலகம் இடர் இலை என்றாள் - பிறகு உலகில் துன்பமே இல்லை எனக் கூறினாள். திறம் தெரிதல் - பிறர் மனநிலையின் தன்மையை அறிதல் என்றும் தான் செய்யும் வஞ்சகச் சூழ்ச்சிகளின் திறமைகள் அறிந்து அவற்றிற்கேற்ப வினைபுரிதல் எனவும் ஆம். செப்பம் - செம்மை; கருத்து சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. (குறள். 951 பரிமேழலகர் உரை) அறம் தரு வள்ளல் என்பதற்கேற்பச் சீதை காட்சிப் படலத்தில் 'அறந்தரு சிந்தை என் ஆவி நாயகன்' (5102) என்பதைக் காணலாம். இக்காப்பியத்தில் இக்கருத்து பல இடங்களில் மிளிர்கிறது அரக்கர் வாழ்வோடும் அழிதல் அல்லோரைக் கடியும் அறம்; உலகம் இடர் இலை என்ற நிலை நல்லோரைக் காக்கும் அறம். இறந்தனர் : முற்றெச்சம். 54 |