பொய்கையில் நிகழும் செயல்கள்

கலித்துறை

3724.நவ்வி நோக்கியர் இதழ் நிகர்
     குமுதத்து நறுந் தேன்
வவ்வு மாந்தரின் களி
     மயக்கு உறுவன, மகரம்;
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு
     இவை என்ன,
கவ்வு மீனொடு முழுகின,
     எழுவன, கரண்டம்.

     மகரம் - (அப்பொய்கையிலுள்ள) மீன்கள்; நவ்வி நோக்கியர் - மான்
நோக்குப்போலும் பார்வையை உடைய மகளிரின்; இதழ் நிகர்- இதழ்போன்ற;
குமுதத்து நறுந்தேன்
- செவ்வாம்பல் மலர்களிலுள்ள நல்ல தேனை; வவ்வு
மாந்தரின்
- குடித்து, (மகளிர் இதழ் அமுதம்பருகிய) ஆடவர் போல;
களிமயக்கு உறுவன -
களிப்பால் மயக்கம் அடைவனவாயின; கரண்டம் -
நீர்க்காக்கைகள்; எவ்வம் ஓங்கிய - துன்பம் நிறைந்த; இறப்பொடு பிறப்பு-
இறப்பும் பிறப்பும்; இவை என்ன - இத்தன்மையன என உணர்த்த; கவ்வு
மீனொடு -
வாயில் கவ்விய மீன்களோடு; முழுகின எழுவன - நீரில் முழுகி
எழுவனவாயின.

     பொய்கையில் மீன்கள், மகளிர் இதழ் பருகிக் களிப்படையும் ஆடவர்
போன்று ஆம்பல் மலர்களிலுள்ள தேனை உண்டு மயங்கின.  நீர்க்காக்கைகள்
மாறிவரும் இறப்பையும் பிறப்பையும் உணர்த்துவன போல அடிக்கடி நீரில்
மூழ்கி எழுவனவாய் உள்ளன.  பாடலின் முன் இரண்டடியில் உவமை
அணியும் பின்னிரண்டு அடிகளில் நீர்க்காக்கைகளின் இயல்பான செயலில்
கவிஞன் தன் கருத்தை ஏற்றிக் கூறுவதால் தற்குறிப்பேற்ற அணியும்
அமைந்துள்ளன.  நீர்க்காக்கைகள் தம் செய்கையால் பிறப்பு. இறப்பின்
தத்துவத்தைக் கூட உணர்த்தியதால் காட்சி அணி எனினும் அமையும்.
'பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்' (மணி - 2. 64); 'ஆதலும் அழிவும்
எல்லாம் அவை பொருட்கு இயல்புகண்டாய்' (சிந்தா - 269) என்பன காண்க.
நவ்வி - மான்; வவ்வுதல் - கவர்தல்; எவ்வம் - துன்பம்; மகரம் - மீன்;
கரண்டம் - காரண்டவம்; வடமொழி - இறப்பொடு என்பதில் ஒடு
எண்ணுப்பொருளிலும், மீனொடு என்பதில் ஒடு உடனிகழ்ச்சிப் பொருளிலும்
வந்துள்ளன.  மகரம், கரண்டம் என்பன பால்பகா அஃறிணைப் பெயர்கள். 16